வானொலியிலும் மேடைகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதென்பது கவர்ச்சிகரமானதொரு அரிய கலை. அந்த வகையில் புகழ்பெற்ற சிலரை இந்தப் பக்கங்களில் பதிய வைக்கின்றோம். இந்தக் கட்டுரையில் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களும் ஏனைய நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் கலந்து வருகின்றார்கள்.
இலங்கை வானொலி
இலங்கை வானொலி என்பது ஒரு பெரும் சமுத்திரம்! இன்று தாய் மண்ணிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பகழ்பெற்று விழங்கும் தொண்ணூறு வீதமான கலைஞர்களை அறிவிப்பாளர்களை உருவாக்கிய அந்த சமுத்திரத்தில் இருந்து சிறு துளியாக அங்கு அறிவிப்பாளர்களாக பணியாற்றியவர்கள் பெயர்களை எமக்குத் தெரிந்தவரை இங்கு பதிவு செய்ய முயல்கின்றோம். இலங்கை வானொலியில் ஆரம்பகால அறிவிப்பாளர்களில் முதன்மையானவர் சோ. சிவபாதசுந்தரம்.. இவர் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக இருந்த காலத்திலும் பிற்பாடும் பணியாற்றியவர்களில் ஒருவர் திருமதி செந்தில்மணி மயில்வாகனம் அவர்கள். இவர் அப்பொழுது தலைமை அறிவிப்பாளராக பணிபுரிந்தார். அவருடைய காலத்தில் பணியில் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் விவேகச் சக்கரம் விவியன் நமசிவாயம், கிராமியச் சஞ்சிகை ஏ.யு.சிவஞானம், சுப.பிரமணிய ஐயர், பாலசுப்பிரமணிய ஐயர், கே.எஸ். நடராஜா, சனுன் மொகமட் பெரோஸ் ஏ.யு கபூர், ஞானம் இரத்தினம், விமல் சொக்கநாதன், பொன்மணி குலசிங்கம், அருந்ததி ஸ்ரீரங்கநாதன், வீ.சுந்தரலிங்கம் போன்றவர்கள் ஆவார்கள். இதில் றேடியோ சிலோன் சுந்தரலிங்கம் என பலராலும் அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம் அவர்கள் இலங்கை வானொலியிலும் பின்னர் டீ.டீ.ஊ. தமிழோசையிலும் பணியாற்றியவர். இவரது கணீரென்ற குரலுக்காகவும் தெளிவான சுத்தமான வாசிப்பிற்காகவும் இவரது செய்தி வாசிப்பைக் கேட்பதற்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. இவர் அறிவிப்பாளராக இருந்த வேளையிலும் தனக்குப்பிடித்தமான நாடகத்துறையிலும் நடிகராகப் பணியாற்றி வந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. இவர்களுடன் சற்சொரூபபதி நாதன். சிவராசா. திருமதி சிவராசா. திருஞானம். மு.ஆ. வாசகர். ஆகியோரும் குறிப்பிடப் படவேண்டியவர்கள்
திரு. மயில்வாகனம் அவர்களை திருமணம் செய்வதற்கு முன்னரே செந்தில்மணி அவர்கள் இலங்கை வானொலியில் உயர்ந்த பதவியில் இருந்தவர். இவருக்குப் பின்பே மயில்வாகனம் இலங்கை வானொலிக்குள் பிரவேசித்தார். தொடர்ந்து எஸ்.கே. பரராசசிங்கம். கே.எஸ். ராஜா. அப்துல் கமீத், ஏ.யு..கபூர், புண்ணியமூர்த்தி, ஏ.ன். மதியழகன், திருமதி ஜமுனா சர்வானந்தா, அருணா செல்லத்துரை, கபீல், ஆமினா பேகம், இராஜேஸ்வரி சண்முகம், புவனேஸ்வரி சரா இமானுவல், ஜோக்கிம் பெர்னாண்டோ, சர்வானந்தா மயில்வாகனம், என இந்தப் பட்டியல் மிக நீளமானது இதில் சவர்வானந்தா மயில்வாகனம் அவர்களை எஸ்.பி. மயில்வாகனம் அவர்களின் மகன் என்றே பலர் நினைப்பதுண்டு. ஆனால் இந்த இருவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.! இவர்ககளுக்குப் பின்னால் கலைப்பணியாற்ற வந்த புதிய பரம்பரையில் இளையதம்பி தயானந்தா, அமரர் இரா-பத்மநாதன், அமரர் அங்கையன், கைலாசநாதன், நடேசசர்மா அருந்தி ஸ்ரீரங்கநாதன், எழில்வேந்தன், ரேலங்கி-செல்வராசா, நாகபூசணி கருப்பையா, ஜெயலக்ஸ்மி, ஸ்மாயில் உவைசூர் ரஃமான், மனோகரி சதாசிவம், லூகாஸ் பெனடிக்ற், லூகாஸ் திருச்செல்வம், உருத்திராபதி, கனகசபாபதி நாகேஸ்வரன், ராஜபுத்திரன் யோகராஜன், இப்படியாக இன்னும் சிலரின் பெயர்களையும் குறிப்பிடலாம்.. வாசகர்களே எமக்கு தெரிந்தவகையில் இவர்களின் பெயர்களை பதிவு படுத்திக்கொண்டோம். இவர்களில் முக்கியமானவர்கள் சிலரது விபரங்களை கீழே விபரமாக பதியவைக்க முயல்கின்றோம். மேலே நான் குறிப்பிட்டிருக்கும் பெயர்கள் அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டதல்ல? கூடியவரையில் அப்படி வரவேண்டும் என்றுதான் முயற்சித்தேன் ஆனால் இது முழுமையாக அப்படி இல்லையென்றே விபரம் தெரிந்தவர்கள் தெரிவித்தார்கள். அதை நானும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
றேடியோ சிலோன் மயில்வாகனம்
இலங்கை வானொலியில் தலைமை அறிவிப்பாளராக இருந்த செந்திமணி அவர்களைத் திருமணம் செய்தபின்னர்தான் திரு.மயில்வாகனம் அவர்கள் வானொலி அறிவிப்பாளாராக இணைந்துகொண்டார். ஆனாலும் செந்திமணியைவிட மயில்வாகனம் அவர்களே பிரபலமாக விளங்கினார் றேடியோ சிலோன் மயில்வாகனம் என்றால் எவரும் எழிதில் மறந்திருக்கமாட்டார்கள். இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாறுவதற்கு முன்னர் பிரபலமாக இருந்த அறிவிப்பாளர் இவர். இவரின் குரலில் மயங்கி இலங்கையையும் தாண்டி தமிழ்நாட்டிலும் இவருக்கு ஏராளம் ரசிகர்கள் இருந்தார்கள்.
தமிழ்நாட்டில் வெளியான திரைப்படமான மீண்ட சொர்க்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலு அவர்களை இயமன் மேல்லோகத்திற்கு அழைத்துச்செல்லும் காட்சியில் தங்கவேலு அவர்கள் தன்னுடன் வானொலிப்பெட்டி ஒன்றையும் எடுத்துச் செல்வார். அப்பொழுது வானொலியில் மயில்வாகனம் அவர்கள் அறிவிப்பு செய்து கொண்டிருப்பார் இதைக் கேட்ட தங்வேலு ‘என்னது இந்த சிலோன் மயில்வாகனம் இங்கேயும் வந்திட்டாரே’ என்பார் அந்த அளவிற்கு பிரசித்தி பெற்றது மயில்வாகனத்தின் அறிவிப்புத் திறமை!.
B. H .அப்துல் கமீத்
மயில்வாகனத்திற்குப் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்த்தானத்தில் மிகவும் புகழ்பெற்ற அறிவிப்பாளராக இருந்தவர் திரு.அப்துல் கமீத் அவர்கள். இவருக்கு மொழியையும் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்!
அறிவிப்புத்துறையில் பெரும் மாற்றத்தைச் செய்தவர் என்றுகூட இவரைக் கூறலாம். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்ற நிகழ்ச்சியின் பிதாமகன் இவர்தான்! தமிழ்நாட்டில் சண் தொலைக்காட்சியில் வாராவாரம் இடம்பெற்ற ‘லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு’ நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே ரசிகர்கள் தங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் வந்து குந்திவிடுவார்கள் என பத்திரிகைகள் இந்த நிகழ்ச்சியைப்பற்றி குறப்பிட்டிருக்கின்றன.
இவர் சிறந்த நடிகரும்கூட இலங்கை வானொலியில் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற நாடகங்களில் ஒன்றான ‘ஒரு குடும்பம் கோயிலாகின்றது என்ற நாடகத்தை கேட்ட அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான் அப்துல் கமீத் அவர்களின் ரசிகன்’ என்று கூறியிருந்தார். அத்துடன் இலங்கையில் புகழ்பெற்ற ‘கோமாளிகள் கும்மாளம்” நாடகத்திலும் பின்னர் அது ‘கோமாளிகள்’ என்ற பெயரில் திரைப்படமாகிய போதும் அத் திரைப்படத்திலும் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின இதயத்தைக் கொள்ளை கொண்டவர். கமல்ஹாசன் தயாரித்த ’தெனாலி’ திரைப்படத்தில் இவரது பங்களிப்பு அதிகம். அத்துடன் வானொலி நாடகங்கள் இசையும் கதையுமென இவரின் கலைப்பணியும் மிக நீளமானது. இவரின் அறிவுப்புச் சேவையைப் பாராட்டி 2004ம் ஆண்டு லண்டனில் மாபெரும் பாராட்டுவிழா நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது!.
K. S. ராஜா
மதுரக்குரலோன் என அழைக்கப்பட்ட கே.எஸ். ராஜா அவர்கள் ஒரு வித்தியாசமான அறிவிப்பாளர்! ஏனைய அறிவிப்பாளர்களைவிட ஒரு நிமிடத்தில் அதிகமான சொற்களை உச்சரித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்! இப்படியாக இவர் வேகமாக அறிவிப்புச் செய்யும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்திருந்தது. இவருக்கு தமிழ் நாட்டிலும் ஏராளம் ரசிகர்கள் இருக்கின்றார்கள்! திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ரி.ராஜேந்திரர் அவர்கள் தனது படங்களுக்கு இந்திய வானொலியில் இவரின் குரலிலேயே விளம்பரம் செய்வித்திருந்ததை நானும் கேட்டிருக்கின்றேன்!
ஒரு நிகழ்ச்சியை நிறைவு செய்துவிட்டு விடைபெறும்போது ‘உங்களிடம் இருந்து விடை பெறுவது கே.எஸ்.’ எனக் கூறிவிட்டு ராஜா என்னும் சொல்லை ராஜா என்னும் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் ராஜா என்று சொல்வதை அவரது குரலிலேயே ஒலிக்கவிடுவார்.
இவரோடு சில வாரங்கள் நான் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் இலங்கை வானொலியில் அறிவிப்பாளர்களுக்கிடையில் இருந்த போட்டி பொறாமைகளைப் பற்றியெல்லாம் மனம் நொந்து சொல்லியிருக்கின்றார். இறுதியில் இவர் இனம் தெரியாதவர்களால் அனியாயமாகச் சாகடிக்கப்பட்டார் என்பது வேதனையான செய்தி!.
விமல் சொக்கநாதன்
இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக செய்தி வாசிப்பவராக நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும் சிறந்த விமர்சகராகவும் அத்துடன் இலங்கையில் தயாரான ‘புதியகாற்று” என்ற திரைப்படத்தில் கௌரவ பாத்திரத்தில் நடித்தும்! பத்திரிகைகளில் கலை விமர்சனங்கள் மற்றும் கட்டுரைகளும் எழுதிவருபவர். இப்படி பல துறைகளிலும் தனது திறமையினாலும் குரல் வளத்தினாலும் உயர்ந்து நின்றவர் விமல் சொக்கநாதன் அவர்கள்!
தற்சமயம் லண்டனில் வாழ்ந்துவரும் இவர் லண்டன் B. B. C தமிழ் வானொலியிலும், மற்றும் சில தமிழ் ஊடகங்களில் கௌரவ செய்தி வாசிப்பவராகவும் பணியாற்றி வருகின்றார். சில வருடங்களுக்கு முன்னர் இவர் இலங்கை சென்றிருந்தபோது இலங்கை வானொலி நிர்வாகம் இவரை ஒருநாள் கௌரவ விருந்தினராக அழைத்து அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் இவரின் மேற்பார்வையிலேயே ஒலிபரப்புச் செய்தது இவரின் குரலுக்குக் கிடைத்த கௌரவம்!.
இளையதம்பி தயானந்தா
யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த தயானந்தாவின் தமிழ்ப் புலமை செழிப்பானது. மரபு இலக்கியத்தோடு நவீன இலக்கியத்தையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர். யாப்பிலக்கணத்தை அறிந்தவர். இவர் நடத்தும் கவிதை அரங்குகள் கச்சிதமாக இருக்கும். அறிஞர்களை கலைஞர்களை செவ்வி காணும்மோது செவ்வி கொடுப்பவரை திக்குமுக்காட வைத்துவிடுவார். அப்படியாக வானொலிப் பேட்டிகளுக்கு புதிய வடிவம் கொடுத்தவர். இத்தகைய பன்முகப்பட்ட ஆழுமை கொண்ட தயானந்தாவை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவர் பின்பு லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் வெக்ரோன் தொலைக்காட்சிக்காக அதன் கொழும்புக் கலையகத்தில் இருந்து பணியாற்றியிருந்தார். ‘இருக்கின்றோம்’ என்னும் சஞசிகைக்கும் சில காலம் ஆசிரியராக இருந்த இவர் தற்பொழுது லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.
திருமதி யோகா- தில்லைநாதன்.
பெண் அறிவிப்பாளர்களில் இலங்கை வானொலியில் மிகவும் புகழ்பெற்ற அறிவிப்பாளர் திருமதி யோகா –தில்லைநாதன் அவர்கள். இவர் தற்சமயம் லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.
பல வருடங்களாக லண்டனில் ‘கானக்குயில்’ என்னும் நிகழ்ச்சியை நடாத்தி போட்டிகள் மூலம் பாடகர்களுக்கு பரிசில்கள் வழங்கி வளர்ந்து வரும் பாடகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். இவர் இலங்கையில் தயாரான ‘டாக்சி றைவர்’ ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற தமிழ்ப் படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வானொலி மாமா சரவணமுத்து
இலங்கை வானொலியின் தேசிய ஒலிபரப்பில் சிறுவர் மலர் என்னும் நிகழ்ச்சி அப்பொழுது பிரபலமானது. இப்பொழுது மெடிக்கல் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்கு அலைவது போல அப்பொழுது இந்தச் சிறுவர் மலரில் தமது பிள்ளைகளின் குரல்களை ஒலிக்கவைக்க பெற்றோர்கள் ஆலாய்ப் பறந்ததுண்டு.
பிற்காலத்தில் பிரபலமான அறிவிப்பாளர்கள் நடிகர்கள் பலருக்கு அன்று இந்த சிறுவர் நிகழ்ச்சி நாற்றுங்கால அமைந்திருக்கின்றது சோ. நடராஜா, ஞானதீபம் மோசஸ், பேரம்பலம், ராம்-சுந்தரலிங்கம், வ.இராசையா, மகேசன், ஏ.யு. கபூர், நடராசா ஜயர், அப்துல் கமீட், ஜப்பார், செந்தில்மணி, மரைக்கார்-ராமதாஸ், உபாலி-சந்திரசேகரன், இரா-பத்மநாதன், கு. இராமச்சந்திரன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குபவர்கள். இன்று பலராலும் பேசப்படும் ‘கலாபூசணம்” மானா மக்கின் அவர்கள் இன் நிகழ்ச்சிக்காக பல குட்டி நாடகங்களை எழுதியிருக்கின்றார். பிற்காலத்தில் அன்று அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியருக்கும் சரவணமுத்து அவர்களுக்கும் எற்பட்ட மனஸ்த்தாபம் காரணமாக இவர் சேவையில் இருந்து விலக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
திருமதி ஆனந்தி
திருமதி ஆனந்தி அவர்களை B. B. C ஆனந்தி என்றுதான் கூறுவார்கள்! காரணம் இவர் B. B. C தமிழ்ப்பிரிவில் நீண்ட காலம் பணியாற்றியவர் அத்துடன் செய்தி சேகரிப்பவராகவும் பணிபுரிந்திருக்கின்றார். அந்த வகையில் உலகத்தில் உள்ள பல பிராபலமான தலைவர்களையெல்லாம் செவ்வி கண்டிருக்கின்றார். விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை செவ்வி கண்டதை தன் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியென இவர் கூறியிருக்கின்றார். தற்பொழுது டீ.டீ.ஊ.யில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.
திருமதி இராயேஸ்வரி- சண்முகம்
இலங்கை வானொலியில் ஒலித்த மற்றுமொரு பெண்குரல் திருமதி ராயேஸ்வரி சண்முகம் அவர்களுடையது. பெண்களுக்கான பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியதுடன் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பவராகவும் இவர் பணிபுரிந்திருக்கின்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
அமரர் இரா-பத்மநாதன்
கிழக்கிலங்கையைச் சேர்ந்த இவர் ஒரு மூத்த பத்திரிகையாளர். ஈழத்தின் பத்திரிகை ஊடக ஜம்பவானான சிவநாயகம் அவர்களோடு இணைந்து சுதந்திரன் பத்திரிகையில் பணியாற்றியவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இவரை தம்முள் உள்வாங்கியதை சகலரும் பாராட்டினார்கள்
இவர் தரமான உரைச்சித்திரங்களைத் தயாரித்து ஒலிபரப்பினார். சிறிது காலம் இவரது பொறுப்பில் சிறுகதைகளும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. இவரும் வானொலி மாமாவாக இருந்து ஏராளமான வானொலி மருமக்களைத் தேடிக்கொண்டவர்.
நாடறிந்த கலைஞராக விளங்கும் ஸ்ரீதர் பிச்சையப்பா இவரது நெறியாழ்கையில் உயர்ச்சி கண்ட பலருள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக இசையரசி-கலாசூரி
அருந்ததி ஸ்ரீரங்கநாதன்
பிரசித்தமான பெயரான அருந்ததி அவர்கள் கர்நாடக இசை வித்துவான்கள் ஏ.ன். பாலசுப்பிரமணியம். கருணாகரன் போன்றோர் வரிசையில் இணைக்கப்பட வேண்டியவர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கல்விச்சேவைக்கென நியமனம் பெற்று தேசிய சேவைக்குள் புகுந்தவர். இதற்கு உடந்தையாக இருந்தது இவரது இசை ஞானமாகும். இவரது பாண்டித்தியங்கள் இவரை தமிழ்ச் சேவையின் பணிப்பாளர் பதவி வரை உயர்த்தியது.
ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலத்திலும் உறுப்பினராக இருந்த இவர் இப்பொழுது ஒலிபரப்புச் சேவையில் இருந்து ஓய்வு பெற்று சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான இளையகானம் நிகழ்ச்சிக்கு ஆலோசகராக இருக்கின்றார்.
சனூன் மொகமட் பெரோஸ்
செய்தி வாசிப்பதில் முத்திரை பதித்துக்கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர். 1980ல் ஓலிபரப்புத் துறைக்கு வந்த இவர் 1995ல் சிறந்த ஆண் செய்தி வாசிப்பாளருக்கான விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இவரின் செய்தி வாசிப்பினைக் கேட்பவர்கள் இவர் இலங்கையின் தென் பகுதியைச் சோர்ந்தவர் என்றால் ஆச்சரியப்படுவார்கள் அந்த அளவிற்கு உச்சரிப்புச் சுத்தத்தை பேணி வருபவர்.
உங்களில் ஒருவன் லோகேஸ்
இனிய குரலுக்குச் சொந்தக்காரரான இவர் ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்தில் இசைக்குழுக்கு அறிவிப்பாளராக இருந்து பின்னர் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக கடமையாற்றி தற்சமயம் லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.
தற்பொழுதும் லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளில் இடைக்கிடை இவரது குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
பிரியாலயம் துரைஸ்
சிறு வயதினிலேயே அறிவிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு தாய் மண்ணில் பல இசைக்குழுக்களில் அறிவிப்பாளராக பணியாற்றியிருக்கின்றார்.
பாண்டிச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட தேவகுமாரன் என்ற தேவாவால் முதல் முதலாக பாரிஸில் ஒலிபரப்பான தமிழ் வானொலியில் அறிவிப்பாளராக இருந்த முதல் ஈழத் தமிழ் மகன் என்னும் பெருமை இவருக்கு உண்டு. பின்னர் பாரிஸ் முத்தமிழ் மன்றத்தின் தமிழ் வானொலியில் தலமை அறிவிப்பாளராக பணிபுரிந்தவர். தொடர்ந்து பாரிஸில் இருந்து இருபத்தினான்கு மணினேரம் ஒலிபரப்பாகிய வானொலி தொலைகாட்சி போன்றவற்றில் அறிவிப்பாளராகவும் பொது நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும் பணியாற்றிவருகின்றார்.
இவரிடம் உள்ள தனிச் சிறப்புகளில் ஒன்று நிகழ்ச்சி அறிவிப்பு செய்யவேண்டிய விடயத்தை முன்னரே எழுதிவைத்து பார்த்து அறிவிப்பு செய்யாமல் அந்த இடத்திலேயே விபரமாக அறிவிப்பு செய்வது. இவரது கலைப்பணியும் மிக நீளமானது. இவர் இலங்கையில் தயாரான ‘சுமதி எங்கே’ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்திருந்ததுடன் அந்தப்படத்திற்கான டைற்றில் எழுத்துக்களை எழுதியவரும் இவர்தான்.
பெஸ்ரோன் எஸ். கே. ராஜன்
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இயங்கிய பெஸ்ரோன் ஒலிபரப்பு சேவையை யாழ்ப்பாணத்து மக்கள் எழிதில் மறந்திருக்கமாட்டார்கள். அந்த விளம்பரங்களில் ஒலித்த காந்தக்குரலுக்கு சொந்தக்காரர் இந்த எஸ்.கே. ராஜன் அவர்கள்தான்.
இவர் பாரிஸ் வந்தபின்னர் ‘தமிழமுதம்’ என்னும் வானொலி சேவையை ஆரம்பித்து பாரீஸ் வானலைகளில் தமிழை ஒலிக்க வைத்தவர்களில் இவரும் ஒருவர்.
எமது தாயகத்து கலைஞர்கள் பலரை ஜரோப்பாவிற்கு அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடாத்திய பெருமையும் இவருக்கு உண்டு. ‘இன்னும் ஒரு பெண்’ என்ற சின்னத் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கின்றார். அத்துடன் பாரிசில் தயாரான ‘முகத்தார் வீடு’ சின்னத்திரைப் படத்திலும் இலங்கையில் தயாரான ‘எங்களில் ஒருவன்’ என்னும் திரைப்படத்தில் அறிவிப்பாளராகவே நடித்திருக்கின்றார். இப்படியாக கலை சம்பந்தமான பல நிகழ்வுகளில் தனது பெயரை பதிவு செய்திருக்கும் இவர் இப்பொழுது லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐ.பி.சி. தமிழ் வானொலியில் பிரதான அறிவிப்பாளராகப் பணிபுரிகின்றார். அத்துடன் இலை மறை காயாக இருக்கும் நம் தேசத்துக் கலைஞர்கள் பலரை வானொலி மூலமாக இனம் காட்டிவரும் பாரிய பணியையும் செய்து வருகின்றார்.
என்.ரி.ஜெகன்
இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றி தற்பொழுது ஜேர்மனியில் வாழ்ந்துவரும் இவரை வானொலித் தென்றல் ஜெகன் என்றே அழைப்பார்கள். ஜரோப்பாவில் இயங்கிவரும் வானொலிகளிலும் ரி.ரி.என்.தொலைக் காட்சியிலும் இவர் அறிவிப்பாளராக பணியாற்றியவர். கவர்ச்சிகரமான மேடை அறிவிப்பாளரான திரு ஜெகன் அவர்கள் தற்பொழுது ஐ.பி.சி. தமிழ் வானொலியிலும் அறிவிப்பாளராக பணிபுரிகின்றார்.
நடா மோகன்
லண்டனில் வாழ்ந்துகொண்டு நீண்ட காலமாக லண்டன் தமிழ் வானொலியை நடாத்தி வருபவர் திரு நடா மோகன் அவர்கள். தனது சொந்த வானொலி மூலமாகவும் ஏனைய வானொலிகளில் இணைந்தும் லண்டனில் இருந்து இவரது பணி தொடர்கின்றது. ஐரோப்பா, கனடா என பல நாடுகளில் இருந்து கவிஞர்கள், அறிஞர்கள் இவரது நிகழச்சிகளில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கதாகும். வானொலி மட்டுமல்ல தொலைக் காட்சியிலும் இவர் அறிவிப்பாளராக பணிபுரிந்திருக்கின்றார்.
திருமதி. நவாஜோதி
ஒரு பட்டதாரியான நவாஜோதி அவர்கள் சங்கீதத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர். பிரான்சில் முதல் முதல் ஆரம்பமான ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியிலும். பின்னர் இவரின் கணவரது நிர்வாகத்தில் இயங்கிய ஏ.பி.சி தமிழ் ஒலி வானொலியிலும் பணியாற்றியிருக்கின்றார். பாரிசில் தயாரான ‘முகம்’ என்னும் சின்னத் திரைப் படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த நவாஜோதி தம்பதிகளே.
இலங்கை வானொலியில் ‘வானொலி மாமா’ சரவணமுத்து என்றால் ஐரோப்பிய வானொலிகளில் இவரை வானொலி மாமி என்று சொல்லாம்! குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளையே இவர் அதிகமாக தயாரித்து வழங்கிவந்தார். சிறந்த கவிஞராகவும் திகழும் இவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவந்த ஏ.பி.சி வானொலியும் தற்போழுது இடைநிறுத்தப் பட்டிருக்கின்றது.
மணிக்குரல் மேஜர் சண்
1970 களில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் முதன் முதலில் ஒலித்த விளம்பர ஸ்தாபனம் ‘மணிக்குரல் விளம்பர ஸ்தாபனம்தான். இவ் விளம்பர ஸ்தாபனத்தை இயக்கியவர்கள் வைசின் தர்மலிங்கம் மேஜர் சண், இவரின் சகோதரர் சற்குணமூர்த்தி என்ற சற்குணம் ரகு ஆகிய சகோதரர்கள்தான். இவர்கள் நால்வரின் குரல்களும் உண்மையில் மணிக்குரல்கள்தான்.
இவர் யாழ்ப்பாணத்தில் தலை சிறந்த இசைக்குழுக்களில் அறிவிப்பாளராக பணியாற்றி யிருந்திருக்கின் றார். 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் அன்றைய யாழ் மாநகரசபை முதல்வரால் ‘மணிக்குரல’ மேஜர் சண் என்று கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் மணிக்குரல் சண் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார். இது மட்டுமல்ல பிரபல மனோதத்துவ விஞ்ஞானி அமரர் ஏபிரகாம்-கோவூர் அவர்களும் ‘சொற்கொண்டல்’ என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கின்றார். இவ்வளவு சிறப்பிற்குரிய மேஜர் சண் அவர்கள் 2001 இறுதியில் அமரத்துவம் அடைந்துள்ளார்
மக்கள் குரல் புனிதலிங்கம்
திரு புனிதலிங்கம் அவர்கள் ‘மக்கள் குரல்’ என்னும் பத்திரிகையை நடாத்தியவர் அதுமட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த நிகழ்ச்சி அறிவிப்பாளர்களில் இவரும் ஒருவர்.
இவர்களைத் தவிர பொது அறிவிப்பாளர்களாக இருந்த இன்னும் சிலர். கீதாலயம் காந்தன் அவர்கள். இலங்கை வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகத்தின் மகனான இவர் கண்ணன். அப்சராஸ் போன்ற இசைக்குழக்களில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்திருக்கின்றார் பின்னர் கீதாலயம் என்ற இசைக்குழுவையும் நடாத்தியவர். அடுத்து மயில் சண் என்ற அறிவிப்பாளர் இவர் பல இசைக்குழுக்களில் அறிவிப்பாளராக இருந்திருக்கின்றார். ஆர்.பி. சந்திரன் அவர்களின் ரங்கன் இசைக்குழுவிலும், திரு.திரவியம் அவர்களின் ராஜன் இசைக்குழுவிலும், யோகராஜா அவர்களின் கிளிநொச்சி மணியோசை விளம்பர சேவையிலும், காசி விஸ்வம் அவர்களின் கிளிநொச்சி ஆராதனா விளம்பரசேவையிலும் பணியாற்றியிருக்கின்றார்கள்.
இரா-குணபாலன்
ஐரோப்பாவில் அறிவிப்புத்துறையில் முன்னணியில் இருப்பவர்களில் குறிப்பிடத்தக்க இன்னொருவர் இரா-குணபாலன் அவர்கள்.
ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சி அறிவிப்பாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட குணபாலன் அவர்கள் பாரிஸ் முத்தமிழ் மன்றத்தின் தமிழ் வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரிந்து வானொலி அறிவிப்பாளராக பரிணாமம் பெற்று பின்னர் தமிழமுதம் வானொலியிலும் இவரது குரல் ஒலித்தது. தற்பொழுது ஐரோப்பாவில் ஒலித்துக்கொண்டிருக்கும் சில வானொலிகளிலும் ரி.ரி.என் தொலைக் காட்சியிலும் இவரது. குரல் ஜரோப்பா முழுவதும் ஒலித்திருக்கின்றது. இவருடைய கலைப் பணியும் மிக நீளமானது.
இவர்கள் தவிர இலங்கை வானொலியில் புகழ் பெற்ற அறிவிப்பாளர்களாக இருந்த இன்னும் சிலரைக் குறிப்பிடலாம் அவர்கள் நடராசசிவம், புனிதலோகினி, வாசுதேவன், விக்னேஸ்வரன், டேவிற்-ராஜேந்திரன், ஜோர்ஜ்-சந்திரசேகரன், மணி நிமல்ராஜ், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், சில்வஸ்ற்ரர் எம். பாலசுப்பிரமணியம், ஆகியோர். இவர்கள் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இலங்கை வானொலி மூலமாகப் புகழ் பெற்றவர்கள். இவர்களைப்போல பிரான்சில் இருந்து அறிவிப்பாளாரக வானொலி மூலமாக புகழ்பெற்றவகளில் சிலர் திரு.ஏ.எஸ்.ராஜா, திரு பி.லோகதாஸ், திரு. பிலிப்தேவா, திரு.அருள் மொழித்தேவன், கோவை. நந்தன், திரு.ஜஸ்ற்ரின், போன்றவர்களும் பெண்களில் திருமதி. எழில்-துஸ்யந்தி, திருமதி. வளர்மதி துரைஸ், திருமதி. ஜெயந்தி சாம்சன், திருமதி லீனா ஜெயக்குமார், போன்றவர்களையும் குறிப்பிடலாம். இதேபோல கனடாவில் புகழ்பெற்ற அறிவிப்பாளர்களாக கனடியன் தமிழ் வானொயின் இயக்குனரான திரு.இளையபாரதி அவர்கள். கீதவாணி ராஜ்குமார் அவர்கள. சர்வதேச தமிழ் வானொலி கோணேஸ் (பரமேஸ் கோணேஸ்) அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் இதேபோன்று தற்சமயம் கனடா சர்வதேச தமிழ் வானொலியின் ஜேர்மன் கலையக நிர்வாகியாக இருக்கும் திரு. ரவி மாஸ்ற்றர் அவர்களும் பிரான்ஸ் கலையக நிர்வாகியாக இருக்கும் சரவணையூர் விசு அவர்களும் முன்னர் ஏ.பி.சி தமிழ் வானொலியில் அறிவிப்பாளர்களாகவும் நிர்வாகசபை உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். இதே போன்று லண்டனில் வானோலி மூலமாக பிரபலம் அடைந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சுந்தர் என்ற சுந்தரலிங்கம், பரா பிரபா, செல்லத்துரை நாவரசன், சுகி-சிவேந்திரா, கௌசி-ரவிசங்கர், கே.வி. நந்தன், அனுஷா-சக்தி, அன்ரனி-சத்தியசீலன், எஸ்.பி. ஈஸ்வரநாதன், சிவா-சிவப்பிள்ளை, றூபி-குமார், கலா-புவனேந்திரன், இரவி-அருணாச்சலம், திருமதி.சுமதி-சுரேசன், (இவர் தற்பொழுது தீபம் தொலைக்காட்சியில் பணிபுரிகின்றார்) திரு. ஜெயகுமார், திருமதி ஜெயமாலினி, திரு.கண்ணன், திரு.திருமதி நவஜோதி-யோகரட்ணம் தம்பதிகள், சிவாந்தினி, ரஞ்சினி, குமரகுருநதன், ஜசோதா மித்திரதாஸ், ஜி.எஸ்.குமார், பீற்றர் ஜேசுதாசன், நற்குணதயாளன், சன்றைஸ்-ஸ்ரீரங்கன், போன்றவர்களும் ஆவார்கள். இவர்களில் ஜெயக்குமாரும் கண்ணனும் முன்னர் வெக்ரோன் தொலைக் காட்சியிலும் அறிவிப்பாளரக இருந்தவர்கள். இவர்களைத் தவிர இன்னும் சிலர் இருக்கின்றார்கள். விபரம் கிடைக்கும்போது அவர்களும் இந்தப் பட்டியலில் இணைவார்கள்.