
மலையக இதழியல் முன்னோடி க.ப.சிவம்
இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை சிறு சஞ்சிகைகளே செய்துள்ளன. சிறு சஞ்சிகைகள் மூலமாக சிறந்த பல எழுத்தாளர்கள் உருவாகியுள்ளார்கள்.
தமிழகத்தில் மணிக்கொடி சஞ்சிகை மூலமாகவே சிறந்த பல எழுத்தாளர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்கள். அதேபோல இலங்கையிலும் வடபகுதியில் மறுமலர்ச்சி என்னும் சஞ்சிகை மூலமாகவே இன்றைய பல மூத்த எழுத்தாளர்கள் பிரகாசித்திருக்கின்றார்கள். தமிழகத்தில் மணிக்கொடியும், இலங்கையில் மறுமலர்ச்சியும், செய்த பணியை 1960களில் ‘மலைமுரசு” சஞ்சிகை செய்தது. அந்த மலைமுரசு சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர் திரு. க.ப.சிவம் அவர்கள்.
அறுபதுகளில் மலையகத்தில் அர்த்த புஸ்சடியான இலக்கிய முயற்சிகளில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டனர். அவர்களின் எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது மலைமுரசு சஞ்சிகை.
மலையகத்தின் இன்றைய மூத்த எழுத்தாளர்களான சாரல் நாடான், தெளிவத்தை யோசப், தமிழோவியன் போன்றவர்களெல்லாம் மலைமுரசு மூலமாக வளர்ந்த எழுத்தாளர்களே. இதற்கெல்லாம் காரணமாக விளங்கியவர் மலைமுரசு க.ப.சிவம் அவர்களே.
மலையக கலை இலக்கியத் திறமைகளை நாடறியச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட சிவம் அவர்கள் மலையக சிறுகதைப் போட்டி, மலையக கலை விழா, மலையக நாடக விழா, போன்றவற்றை முன்னின்று நடாத்தியிருக்கின்றார். மலையகத்தில் முதல் முறையாக மலையக எழுத்தாளர் சந்திப்பு ஒன்றினையும் கண்டியில் நடாத்தியிருந்தார் இதன் காரணமாகவே மலைநாட்டு எழுத்தாளர் ஒன்றியம் உருவானது.
இக் காலகட்டங்களில்த்தான் மலையகம், மலைநாடு, மலையக இலக்கியம், என்னும் சொற்றொடர்கள் வலிமை பெறத் தொடங்கியன. தேசியப் பத்திரிகைகள் மலையக எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிடத் தொடங்கின. இதற்கெல்லாம் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் க.ப.சிவம் அவர்களே.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக பத்திரிகைத் துறையை தனது தொழிலாகவும், வாழ்வாகவும் கொண்ட சிவம் அவர்கள் இரண்டு தலைமுறையினரிடையே இலக்கியப் பணியாற்றிய சாதனைக்குரியவராவார். மலையகத்தின் இலக்கியத்துறைக்கு இவர் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணி பாராட்டுக்குரியதும், கௌரவிக்கப்பட வேண்டியதுமாகும்.
நமக்குத் தொழில் எழுத்து. அதுவே கையெழுத்தாய், தலையெழுத்தாய், எனக்கூறும் மலையக இதழியில் முன்னோடி க.ப.சிவம் அவர்களின் பணிகள் வரலாற்றுப் பதிவாகும்.