தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

கே.எஸ்.பாலச்சந்திரன்

அண்ணை  றைற்  கே.எஸ்.பாலச்சந்திரன்

மேடை நாடகம், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், திரைப்படம், அத்தோடு எழுத்துத் துறை, ஓவியம் என அரங்கியலின் சகல பரப்புக்களிலும் நன்கு பாண்டித்தியம் பெற்றவர் பாலச்சந்திரன் அவர்கள்.

கே.எஸ்.பாலச்சந்திரன் என்றதும் உடனேயே ‘அண்ணை றைற்” நாடகமும் நினைவிற்கு வந்துவிடும்! அதுபோலவே ‘அண்ணை றைற்” நாடகத்தின் பெயரைச் சொன்னால் பாலச்சந்திரன் அவர்களும் நினைவிற்கு வந்துவிடுவார்! இலங்கை வானொலியின் ஆறாம் இலக்கக் கலைக்கூடத்தில் 1973ம் ஆண்டு முதன் முறையாக மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் இலங்கையில் மட்டுமல்லாது உலகத்தில் தமிழர்கள் வாழ்கின்ற வேறு சில நாடுகளிலுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேறி சாதனை புரிந்திருக்கின்றது. 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பத்து நாட்களாக நடைபெற்ற தமிழாராட்சி மாநாட்டில் பத்து நாட்களும் தினசரி இரண்டு வெவ்வேறு அரங்குகளில் மேடையேறிய சாதனை ‘அண்ணை றைற்”ருக்கு மட்டுமே உண்டு.

இலங்கை வானொலியில் 1970ல் இருந்து 1972வரை இரண்டு ஆண்டுகளாக தொடராக ஒலிபரப்பான ‘தணியாத தாகம்” நாடகத்தில் சோமு என்னும் பாத்திரம் மூலமாக பிரபல்யம் ஆன இவர் அத்தோடு இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் 1971ல் இருந்து 1992 வரை சுமார் ஐநூறு நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் இலங்கை வானொலியில் சிலகாலம் கலைஞர் வாசுதேவனால் தயாரித்து வழங்கப்பட்ட ‘கலைக்கோலம்” என்னும் சஞ்சிகை நிகழ்ச்சியில் ‘அண்ணை றைற்” நாடகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ‘கிராமத்துக் கனவுகள்” ‘வாத்தியார் வீடு” ஆகிய இவரது தொடர் நாடகங்கள் இலங்கையில் மட்டுமின்றி தமிழகத்திலும் பல ஆயிரக்கணக்கான நேயர்களை மகிழ்வித்த நாடகங்களாகும்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட கலியுக காலம், வாடைக்காற்று, நாடு போற்ற வாழ்க்கை, அவள் ஒரு ஜீவந்தி, சர்மிளாவின் இதய ராகங்கள் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும்,  ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்திருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் புலம் பெயர்ந்து கனடா சென்ற பின்னர் அங்கும் உயிரே ஊயிரே, எங்கோ தொலைவினில், மென்மையான வைரங்கள், ஆகிய தொலைக்காட்சித் திரைப்படங்களையும் எழுதி நடித்து தயாரித்து வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையின் 1982ல் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவை ஆரம்பமானது. 1983ம் ஆண்டு கலைஞர் வாசுதேவனின் இயக்கத்திலான ‘காதம்பரி” நிகழ்ச்சியில் ‘அண்ணை றைற்” தனி நடிப்புடன் ஆரம்பமாகி ‘ஓடலி இராசையா” மூலமாக பிரபல்யமாகி வேறும் சில தொலைக்காட்சி நாடகங்கள் மூலமாக புகழின் உச்சத்திற்கே சென்றிருந்த பாலச்சந்திரன் அவர்கள் விளையாட்டுத்துறை விஞ்ஞானத்துறை தொடர்பான சில விவரணச் சித்திரங்களையும் ரூபவாஹினிக்காகத் தயாரித்து வழங்கியிருக்கின்றார்.

கலைத்துறை மட்டுமல்ல எழுத்துத் துறையிலும் இவர் தனது திறமைகளை வெளிப்படுத்தி இருக்கின்றார். ஏராளமான நாடகங்களை எழுதியிருக்கும் பாலச்சந்திரனின் மூன்று சிறு கதைகள் வீரகேசரியிலும், தினகரனில் ஒரு சிறுகதையும் பிரசுரமாகியிருக்கின்றது. அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகையில் 1987-88ம் ஆண்டுக் காலப் பகுதியில் குழந்தைகளுக்கான பல குட்டிக் கதைகளை எழுதியிருக்கின்றார். அந்த கதைகளுக்கான ஓவியங்களையும் இவரே வரைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பொழுது கனடாவில் வாழ்ந்துவரும் பாலச்சந்திரன் அவர்கள் கனடிய ஜரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சிகளில் தயாரித்து வழங்கிய முத்திலிங்கம் சோ” என்னும் நிகழ்சியின் மூலமாக தொடர்ந்தும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud