கலையரசு சொர்ணலிங்கம் பிறப்பு: நவாலி – ஈழம்
ஈழத்தின் நாடகத் தந்தையென்றும். நவீன நாடககங்களின் பிதா மகனென்றும் கலையரசு சொர்ணலிங்கம் ஜயா அவர்களை கொ கௌரவமாக அழைத்துக் கொள்வார்கள்.
இவர் நடிகர் நாடகப் பிரதிகள் தயாரிப்பாளர் இயக்குனர் என்பதோடு சிறந்த ஒப்பனையாளர் மேடை அமைப்பாளர் எனப் பல துறைகளிலும் வல்லுனர். தமிழ் நாட்டின் பிரபல நாடகக் கலைஞர் பம்மல் சம்பந்தம் அவர்களை தனது ஞானகுருவாகக் கொண்டு கலைப்பணியைத் தொடர்ந்தபோதும் சேக்ஸ்பியரின் நாடகங்களை தமிழ்ப்படுத்தியும் புராண இதிகாச நாடகங்களையும் மேடை ஏற்றியுள்ளாரே தவிர தமிழ் நாடகத்துறையை சமூக சக்தியாக்க முயலவில்லையென்று கலாநிதி க.சிவத்தம்பி அவர்கள் ‘மல்லிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் காலத்தில் நாடகங்களில் நடிப்பது கௌரவக் குறைவாக கருதப்பட்ட போதிலும் தனது நாடகங்களில் வைத்தியர்கள் வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரச சேவையாளர்களை நடிக்கவைத்து நடிப்புத் துறைக்கு பெருமை சேர்த்த சிறப்பு கலையரசு ஜயா அவர்களுக்கே உண்டு.
இவர் தனது ‘தேரோட்டி மகன்” நாடகத்தில் மேடைக்கு மேடை அந்த நாடகத்தின் பல பாத்திரங்களையும் மாறி மாறி நடித்து தனது மாறுபட்ட நடிப்புத் திறனை ரசிகர்களுக்கு வெளிக்காட்டியுள்ளார். தனது எழுபத்தி ஜந்து வயதிலும் நடித்துக்கொண்டிருந்ததோடு ‘ஈழத்து நாடகமும் நானும்” என்னும் நூலையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.