மேடை வானொலி சினிமா சின்னத்திரை நடிகர். இயக்குனர் கவிஞர். எழுத்தாளர்
பிறந்தது: நவாலி. ஈழம்
வாழ்ந்துகொண்டிருப்பது:- கந்தர்மடம். யாழ்ப்பாணம்
1950களில் நாடகத்துறைக்குள் நுளைந்த கலாபூசணம் நா. செல்லத்துரை அவர்கள் சமூக நாடகங்கள் வரலாற்று இலக்கிய நாடகங்கள் “சிந்துனடைக் கூத்து” என்று 75க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தும். இயக்கியும் இருக்கின்றார் அத்தோடு “காத்திருப்பேன் உனக்காக” என்னும் திரைப்படத்தில் நடித்தும் திரைக்கதை வசனம் எழுதியும். “பூதத்தம்பி” என்னும் சின்னத்திரைப் படத்திலும் சில வானொலி நாடகங்களிலும் நடித்திருக்கின்றார்.
1967ம் ஆண்டில் இவர் எழுதி வெளியிட்ட “முகை வெடித்த மொட்டு” என்னும் நாவலுக்கு இலங்கை அரசின் சாகித்தி மண்டல விருது கிடைத்திருக்கின்றது. தனது ஆறு ஓரங்க நாடகங்களைத் தொகுத்து “லகம் எங்கள் கைகளிலே” என்ற நூலை 1978ல் வெளியிட்டிருக்கின்றார். மேலும் இவர் எழுதிய சின்னவனா? பெரியவனா? என்று சிந்து நடைக் கூத்தும். சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்து நாடகமாக்கிய “சிலை எடுத்த சேரன்” என்ற நாடகமும் நூலாக வெளிவந்திருக்கின்றன. அதுமாத்திரமல்ல முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருப்பதுடன் ஏராளமான கவிதைகளையும் எழுதியிருக்கின்றார். இதில் முக்கியமானது திருப்பாடல் கவிதைகளாகும்!. கிறிஸ்த்தவர்களுக்கு திருப்பாடல்கள் மிக முக்கியமானதாகும். திருவில்லியத்தில் 19வது நூலாக திருப்பாடல்கள் காணப்படுகின்றன. அதில் உள்ள 150 திருப்பாடல்களையும் எளிமையான பாடல்களாக இலகு தமிழில் கவிதையாக படைத்திருக்கின்றார்.
இத்தனை சிறப்புகள் மிக்க கலைஞரான திரு.நவாலியூர் நா. செல்லத்துரை அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் “கலாபூசணம்” “முதுகலைஞர்” விருதுகளுடன் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் வழங்கப்பட்ட ‘கலைமதி” என்னும் விருது உட்பட 12 விருதுகளைப் பெற்றிருக்கின்றார்.
2004ம் ஆண்டு நடைபெற்ற இவரின் பவள விழாவில் ஒரு சிறப்பு மலரும். 2008ல் இவரின் கலைப்பணி பொதுப்பணி எழுத்துப்பணி ஆகியவற்றை ஆய்வு செய்து வி.பி. தனேந்திரா அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட நவாலியூரானின் கலை இலக்கியப் பணிகள்” என்னும் நூலும் இவரின் சிறப்புக்களை புகழ்பாடி நிற்கின்றது.
இவைகளுக்குள் நவாலியூரான் அவர்களுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு சிறப்பு இவர் பிறந்த மண்ணான நவாலியில் உள்ள மக்கள் இவரின் பெயரால் ‘கலாபூசணம் நவாலியூர் நா.செல்லத்துரை “கலையரங்கம்” என்னும் கலையரங்கத்தைக் கட்டி இவரை கௌரவித்திருக்கின்றார்கள். இலங்கையின் தலைநகரான கொழும்பில் பழம்பெரும் சிங்கள நடிகரான ஜோன்.டி.சில்வா அவர்களின் பெயரில் ஒரு கலை அரங்கம் இருப்பது போல எமது ஈழமண்ணில் ஒரு கலைஞனின் பெயரில் ஒரு கலை அரங்கம் இருப்பது திரு. நவாலியூர் நா. செல்லத்துரை அவர்களுக்கு மட்டுமே.