தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

வைரமாளிகை


சுமார் முப்பது முப்பத்தைந்து வருடங்களைப் பின்னோக்கிய எங்களது நினைவுகளை ஒரு தடவை இரைமீட்டு யாழ்ப்பாணம் நோக்கி நகரவிடுங்கள்.

தங்க நகைகளை வியாபாரம் செய்துவந்த ஸ்தாபனங்களில் மிகவும் பிரபல்யமானது ‘வைரமாளிகை” என்னும் நகைக்ககடை! அதேபோன்று யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் கோமாளி போன்ற தோற்றத்துடன் ஒரு தத்துவஞானி சுவீப்ரிக்கற் வித்துக்கொண்டிருப்பார்! அவரையும் எளிதில் மறந்துவிடமுடியாது!

தலையில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தொப்பி, போட்டிருப்பார்! அவர் அணிந்திருக்கும் நீளக்காற்சட்டையில் பல இடங்களில் உள்ள கிழிசல்களை மறைத்து துணிகள் வைத்து தைக்கப்பட்டிருக்கும். (இன்று மேலை நாட்டு இளைஞர்கள் இதையே ஒரு நாகரீகமாகக்கொண்டு புதிய உடுப்புக்களையே கிழித்து மீண்டும் தைத்துப் போட்டிருப்பதை அதிகமான இளைஞர்களிடம் காண்கின்றோம்).

உடம்பில் ஒரு சேட், அந்த சேட்டிற்குமேலே நீளமான ஒரு கோட். ஆந்த கோட்டினிலே உலக அழகுராணிகளாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஐயர்களுக்கு பூனூல் போடுகின்ற பாணியில் அழகிய முறையில் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு றிபண் அணிவித்திருப்பார்களே! அதேமாதிரி ‘வைரமாளிகை” என்னும் எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்! அவர்தான் ‘வைரமாளிகை”.

இவருடைய உண்மையான பெயர் என்னவென்பது எவருக்கும் தெரியாது!? ஆனால் வைரமாளிகை என்றால் எல்லோருக்கும் அவரைத் தெரிந்துவிடும். இவர் பார்ப்பதற்கு கோமாளி போலத்தான் தோற்றமளிப்பார்! ஆனால் இவர் பேசும் பேச்சுக்களில் தத்துவங்கள் பொதிந்திருக்கும்.

இவர் கதை சொல்லும் பாணியே வித்தியாசமானது! வாயைத் திறக்கமாட்டார். மேல்பல்லும் கீழ்ப்பல்லும் ஒட்டியபடியே இருக்கும். ஆனால் சொண்டுகள் மட்டும் அசைந்துகொள்ளும்.

‘ஜம்பதுசதம், ஜம்பதுசதம், ஜம்பதுசதம், நாளைக்கு லட்சாதிபதி, நாளைக்கு லட்சாதிபதி” போனால் ஜம்பதுசதம் வந்தா ஒரு லட்சம்” இப்படியாக அவர் சுவீப்ரிக்கற் விற்பனை செய்யும் பாணியே வித்தியாசமானது!

சுவீப்ரிக்கற் விற்பனை செய்வதுடன் இவர் பல சமுதாயப் பணிகளும் செய்துகொள்வார்! பஸ்சில் ஏறுவதற்காக மக்கள் நெருங்கியடித்துக்கொள்ளும் சமயங்கள்தான் திருடர்களுக்கு வசதியான நேரம். திருடர்கள் பயணிகள் போலவே நிற்பதால் ஏனைய பயணிகள் அவர்களை அடையாளம் காணமாட்டார்கள். ஆனால் அங்கு வரும் பயணிகள், திருடர்கள் இப்படியாக அனைவரையும் வைரமாளிகைக்கு நன்றாகத் தெரியும்!

அப்படியான சந்தர்ப்பங்களில் தனக்கு எதுவும் தெரியாதவர் மாதிரியும் மக்களைச் சிரிக்க வைக்க நாடகம் நடிப்பவர் போல ‘கள்ளனைத்தேடி பொலிசு வாறான் பிள்ளையள் பொக்கற் கவனம்!பொக்கற் கவனம்!”எனச் சொல்லி பயணிகளை எச்சரிக்கைப்படுத்துவார்.

பஸ் சுணங்கினாலும் நேரம் போவது தெரியாமல் பயணிகளுடன் மகிழ்ச்சியாகக் கதைத்துக்கொண்டிருப்பார். தங்கள் பிள்ளைகள் யாரையாவது காதலிக்கின்றார்கள் என்பதுபற்றி அவர்களது தாய், தகப்பனுக்குத் தெரிவதற்கு முன்பே வைரமாளிகைக்குத் தெரிந்துவிடும்! இளம் காதலர்க‌ளைக் கண்டால் அவர்களுக்கென்றே குசியான பாடல்களைப் பாடுவார்.

அதேநேரம் பயணம் செய்ய வரும் கல்லூரி மாணவிகள், மற்றும் இளம் பெண்களை சைட் அடிப்பதற்கென்றே இளைஞர்கள் பஸ் நிலையம் வருவதுண்டு! இந்த இளம் பெண்களை பாதுகாக்கும் பணிகளிலும் வைரமாளிகை தன்னை ஈடுபடுத்திக்கொள்வதுண்டு! எப்படி?

இந்தக் காதல் மன்னர்கள்!? பஸ் நிலையத்தில் நிற்கும் ஏனையவர்களுக்குத் தெரியாமல்த்தான் தங்கள் குறும்புகளையும் சேட்டைகளையும் செய்வார்கள். ஆனால் இவர்களைக் கண்டதுமே தனது ஞானக் கண்களால் இவர்களின் செய்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வைரமாளிகை சினிமாவில் வரும் ஒரு காதல்ப் பாட்டை பாடியபடியே அங்கு வருவார்.

‘தம்பிக்கு மீசை முளைச்சிட்டிது! கல்யாண ஆசை வந்திட்டிது! இப்ப சைட் அடிக்கிறார் தம்பி சைட் அடிக்கிறார்” என மிகப்பலமாகச் சத்தமிட்டுச் சொல்லுவார் அப்பொழுது அங்குள்ள பயணிகளின் பார்வையெல்லாம் குறிப்பிட்ட அந்த வாலிபர்கள் மேல்த்தான் விழும். உடனேயே மின்னல் வேகத்தில் வாலிபர்கள் அந்த இடத்தைவிட்டு மறைந்த சம்பவங்கள் பல தடவைகள் நடந்ததுண்டு!

இதுபோன்ற காதலர்களையும் வைரமாளிகையையும் மையமாகவைத்து வெற்றிமணி ஆசிரியர் திரு . சிவகுமாரன் அவர்கள் தான் எழுதிய வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற சிறுகதையில் இப்படியாக நகைச்சுவையாக சொல்லியிருக்கின்றார்.

‘புதிதாக திருமணம் செய்த ஒரு தம்பதிகள் படம்பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வருகின்றார்கள். பஸ்சில் வந்து இறங்கியதும் அந்தத் தம்பதிகள் இருவரின் பார்வையிலும் வைரமாளிகை தென்படுகின்றார். மணமகனுக்கு அவரைக் கண்டதும் அடி வயித்தைக் கலக்குவதுபோல இருந்தது காரணம் தான் முன்பு காதலித்த பெண்ணோடு இந்த பஸ் நிலையத்தில் நிற்கின்றபோது பலதடவைகள் வைரமாளிகை தன்னைப்பார்த்து கேலியாக பாடிய நாட்கள் நிறையவே உண்டு.

இன்று வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வருவதைக் கண்டால் என்னமாதிரியான பாடல் பாடி தன் மனைவிக்கு காட்டிக்கொடுத்துவிடுவாரோ? என்ற பயம்தான். ஆனால் மணப்பெண்ணும் அதே நிலையில்த்தான்! அவளும் தனது பழைய காதலனுடன் இதே பஸ் நிலையத்தில் நிற்கும்போது தனக்கு புத்திமதி கூறுவதுபோல வைரமாளிகை பாட்டுப்பாடி செய்த எச்சரிக்கை எல்லாம் நினைவிற்கு வந்தது!
இன்று வேறொருவருடன் தான் கைகோர்த்துச் செல்வதைப் பார்த்தால்!? அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

வைரமாளிகையோ இருவரையும் கண்டுவிட்டார்! இப்பொது அவர் பாடுகின்றார் ‘கண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள்” என்று.அங்கிருந்த பயணிகள் வைரமாளிகை தங்களை மகிழ்விப்பதற்காகவே பாடுகின்றார் என எண்ணிக்கொள்கின்றார்கள்.

மேடைகளில் வலம்வராவிட்டாலும் தன்னுடைய நகைச்சுவை நிறைந்த கலை உணர்வுகளை மூலதனமாக வைத்து சுவீப்ரிக்கற் தொழிலாளியாக இவர் யாழ் பஸ் நிலையத்தை வலம் வந்து கொண்டிருந்த ‘வைரமாளிகை” என்றழைக்கப்பட்ட அந்த அற்புதமான கலைஞன் இப்பொழுதும் எங்கள் நினைவலைகளில் வந்து சரசம் செய்து நமது கலைஞர்கள் பட்டியலிலும் இணைந்து கொள்கின்றார்.

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud