தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

m.p. பரமேஸ்.

மெல்லிசை வேந்தன் – m.p. பரமேஸ்

ஈழத்தில் முதல் தமிழ் பாடல் இசைத்தட்டினை வெளியிட்ட மெல்லிசை வேந்தன் ஆ.பரமேஸ்.

அன்று 68களில் நான் இசைத் தென்றல் மேடைகளில் கண்டு கேட்டு ரசித்த இவரின் அற்புதமான காதல்க் குரலிசைப் பாடல்களை இன்று இவரைக் கண்டு கதைத்து மதித்து ரசிக்கிறேன் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.

கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள், இசைத் தட்டு வெளியிட்டாளர்கள், இசை நிகழ்ச்சியாளர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இவை அனைத்தையும் தன் வசம் கொண்டு பரமேஸ் கோணேஸ் புரொடக்சன்ஸ் என்ற ஸ்தாபனத்தை 68களில் திருக்கோணமலையில் ஆரம்பித்து இசைத் தென்றல்க் கலைஞர்களைக் கட்டியெழுப்பி கண்ணியத்துடன் தானும் தன் தம்பி கோணேசுடனும் மெல்லிசை மேடை பல கண்டு மேடைப்பாடல்களை 68களின் பின் இசைத்தட்டுகளாக வெளியிட்ட தனிச்சிறப்பு இவரிற்குண்டு.

இலங்கைப் பாடல்களே இல்லாத, முக்கியமாக இசைத்தட்டில் ஈழத்துப் பாடல்கள் இல்லாத அக்காலத்தில் முதன் முதலாக இலங்கைத் தமிழிசைத் தட்டு வெளியிட்ட பெருமை இவருக்குண்டு.

சின்னசின்னச் சொற்களால் சிந்தை கவர இவரெழுதும் பாடல்கள் த‌னி. வரிக்கு வரி வனிதையரும் வாலிபரும் வயதானவர்களும் ரசித்துப் பாராட்டிய இவரின் முதற் பாடல் இலங்கையின் முதலாவது இசைத் தட்டுத் தமிழ்ப் பாடலான „உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது“ என்ற பாடல் இன்றும் மனதை விட்டகலாதது.

இந்தியப் பாடகர்கள் தமது மேடைகளிற் தமது குரலில் ஆசையுடன் ஆர்வத்துடன் பாடிய ஈழத்தவர் பாடல் இந்த உனக்குத் தெரியுமா தான். பாடலின் கேள்வி போலவே இப்பாடல் மூலம் தன்னை எல்லொர்க்கும் தெரியப்படுத்தி விட்டார் எம்.பி. பரமேஸ். டாக்டர் வீணை பாலச்சந்தர் அவர்களிற்கு நீயும் பொம்மை நானும் பொம்மை,  பாலசுப்பிரமணியம் அவர்களிற்கு ஆயிரம் நிலவே வா, ஆரம்பம் போல எங்கள் எம்.பி. பரமேசிற்க்கு உனக்குத் தெரியுமா மணிமுத்திரை. அந்த ஆரம்ப வெற்றிகள் தான் அவர்களை அகலப் பரந்து விரிந்து வளரச் செய்கின்றன என்ற உண்மை உதாரணத்திற்காகவே இதைக் குறிப்பிட்டேன்.

பாரீஸ் மாந‌கரிற்கு இந்தியத்திரைப் பின்னணிப் பாடகர் அருள்மொழி அவர்கள் வந்த பொழுது அறிவிப்பாளர் திரு s.k. ராஜன் அவர்கள் „ஏன் சார் அருள் மொழியவர்களே! நாமெல்லாம் இந்தியத்தமிழ் பாடல்களைப் பாடுகின்றோம். எமது இலங்கைப்பாடலை நீங்கள் பாடினால் என்ன?“ என்ற கேள்விக்கு அருள்மொழியவர்கள் உடனடியாக „ஏனில்லை“ என்று எம்.பி. பரமேஸ் பாடிய உனக்குத் தெரியுமா பாடலை மிக ஆசை ஆர்வத்துடன் பாடினார். அன்று நான் கொண்ட மகிழ்ச்சி அளப்பரியது.

திரைகளிற் கண்டுள்ளோம் பாடலைக் கேட்டுக் காதலிக்கும் கதையம்சங்களை. ஆனால் இவரின் நிஜவாழ்க்கையில் இப்பாடலைக் கேட்டுக் காதலித்துக் கைபிடித்துக் காலமெல்லாம் கணக்கிலடங்காத இசைத் தென்றலில் இணைந்து பாடிச் சென்றாள் ஓருத்தியென்றால் இக்கலைஞன் பாடலிற்கு எத்தனை சக்தி உண்டு என்று எண்ணிப் பாராட்டுகின்றேன்.

இலங்கையில் இசைத் தென்றல் விளம்பரங்களென்ன இடைவிடாது இரு வாரமொருமுறை இசை நிகழ்ச்சிகளென்ன அபாரம்! அபாரம்! புதிய சினிமாப்படம் திரைக்கு வருவது போன்ற பரபரப்பைத் தன் இசைத் தென்றல் நிகழ்ச்சிக்கு விளம்பரத்திறமை மூலம் வெளிப்படுத்தினார். பேருந்துகளில் ஏறினால் பாடசாலை மாணவ மாணவிகள் முணுமுணுப்பது பரமேஸ் கோணேசின் இசைத்தென்றல் பேச்சுத்தான். காரணம் பேருந்துகளில் ஒரு பக்கம் மில்க்வைற் சவர்க்கார விளம்பரத்திற்காகப் பளிச்சிடும் திருக்குறள். மறுபக்கம் முழுவதும் பரமேஸ் அவர்களின் இசைத் தென்றல் விளம்பரம்.

வானொலியைத் திறந்தால் தினமும் இசைத்தென்றல் விளம்பரம்தான். இப்படியான ஒரு துணிச்சலான விளம்பரத்தைச் செய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டுகளை விற்பனை செய்யாது மண்டப வாசலிலேயே மக்கள் திரண்டு வந்து அனுமதிச் சீட்டுக்கள் பெற்றது மட்டுமல்ல, ஆசனங்கள் போதாது ஒரு இரவில் ஒரு மேடையில் 2 அல்லது 3 நிகழ்ச்சிகள் நடத்திய இசை நிகழ்ச்சி வெற்றி நிர்வாகஸ்தர்  பரமேஸ் அவர்கள். தானே கலைஞனாக இருந்து தானே சகலவற்றையும் செய்துவிட்டு இசைத் தென்றலில் அவர் கலைஞனாக மலர்ந்திருக்கும் திறமையே அவரைச் செயல் வீரராக்கியது.

அவரின் இசைத் தென்றலின் முதல் வெற்றி, குறிப்பிட்ட நேரம் மணியடித்து வானொலியிற் கூறுவது போல் „உங்கள் நேரங்களைப் பாருங்கள் மாலை 7 மணி“ என்று முதல் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். இன்று வெளிநாட்டில்க் கூட எந்த நிகழ்ச்சியும் நேரத்திற்கு ஆரம்பிப்பதில்லை, சகலவசதிகள் இருந்தும்.

குறிப்பிட்ட நேரம் முதலாவது வெற்றி. இரண்டாவது வெற்றி பரமேஷ் கோணேஷ் இசைத் தென்றலிற்தான். முதன் முதலாகச் சினிமாப்பாடல்களிற்குரிய அதே இடையிசை வாசிக்க ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் சகல இசைக் குழுக்களும் தாம் விரும்பிய இடையிசையை வாசித்தனர். இது யாவரிற்கும் தெரியும்.

72களில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கலைமாமேதை நாடகத்தந்தை நவாலியூர் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் „ஈழத்து மெல்லிசை மன்னன்“ என்று கௌரவித்ததிற்கமைய இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழவேண்டுமென வாழ்த்துகிறேன். அன்று பரமேஸ் கோணேஸ் சகோதரர்கள், உதவி இசையினர் எஸ். இ. மகேஸ் மூவருக்கும் கலையரசு வழங்கிய கௌரவத்துடன் இன்று பரமேஸ் தனித்தியங்கினாலும் தங்கத் தமிழிசைமகள், மனைவி மாலினியுடனும் மூத்த மகள் பிரபாலினியுடனும் 95களில் வெளியிட்ட சங்கீத சாம்ராஜ்ஜியம் இசைப் பேழை இவரின் வாரிசுகளின் தொடர் றிதமஸ் இசைத் தென்றலிற்கு வழிகாட்டும்.

அண்மையில் ‘என் இனிய இசைப்பயணங்களில்….” என்னும் நூலினை இவர் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார் இதில் இவரும் இவருடைய நண்பர்கள் பலரும் எழுதியிருக்கின்ற கட்டுரைகள் பரமேஸ் அவருடைய சிறப்புக்களை புடம் போட்டுக் காட்டுகின்றன

தனது அறுபதாவது வயதில் தன் ஆசை இசைக் குளுவிநர்களுடன் இசைத்துக்கொண்டிருக்கும் இவர் சிறப்பினைச் சிந்தனையிற் கொள்ள வேண்டியவர்கள் வளர்கலை இசையினர்….. வாழ்க பரமேஸ் வளமுடன் வருடம் பல! ப‌ல! சிந்தித்துச் சிறப்பெழுதியென வாழ்த்தினேன்!

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud