(சுமார் ஜம்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்நாடு சென்று நீச்சல் உடையில் நடித்து பரபரப்பூட்டிய நடிகை)
பிறப்பு:- யாழ்ப்பாணம் – தமிழீழம்
இலங்கையில் தயாரான பல தமிழ்த் திரைப்படங்களில் தென்னிந்திய நடிகர்கள் பலர் நடித்து இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கு மெருகூட்டியிருக்கின்றார்கள். இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பான சில படங்களில் இரு நாட்டுக் கலைஞர்களும் இணைந்தும் நடித்திருக்கின்றார்கள். ஆனால் சுமார் ஜம்பது வருடங்களுக்கு முன்னரே இலங்கையைச் சேர்ந்த தமிழ் நடிகை ஒருவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து புகழ் அடைந்திருக்கின்றார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? நம்புங்கள்! அது உண்மை! அவர்தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடிகை தவமணிதேவி.
இவர் முதல் முதலாக தமிழ்நாட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மொடோன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த சதி அகல்யா” என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து ஸியாம் சுந்தர்” ஸீதா ஜனனம்” ஆகிய பல படங்களில் நடித்த இவர் 1946ல் வெளியான ‘வனமோகினி” என்னும் திரைப்படத்தில் காட்டுராணியாக மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது மாத்திரமல்ல இன்னொரு படத்தில் நீச்சல் உடையிலும் நடித்து தமிழ்த் திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்த முதல் தமிழ் நடிகை என்று பரபரப்பாகப் பேசப்பட்டவர்.
இயற்கையிலேயே மிகவும் கவர்ச்சியான உடலமைப்பைக்கொண்ட தவமணிதேவி அவர்கள் சினிமாவில் மேலும் கவர்ச்சி காட்டி நடிக்க இவருக்கென பெரும் ரசிகர் கூட்டமே இருந்ததாக பத்திரிகைகள் எழுதியிருந்தன. தமிழ்நாட்டின் பல பத்திரிகைகளில் இவரின் நீச்சலுடைப் படங்களைப் பிரசுரித்து இவருடைய பேட்டிகளும் வெளிவந்திருந்தன. அந்தப் பேட்டிகளில் ‘பதிவிரதை அகல்யாவாக நடிப்பதற்காக இலங்கையில் இருந்து வந்திருக்கும் நடிகை தவமணிதேவி அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு குடும்பப் பெண்கள் தாராளமாக முன்வரவேண்டும் எனக் கூறுகின்றார்” எனத் தலைப்பிட்டிருந்தார்கள்.
இவர் நீச்சல் உடையில் நடித்த திரைப்படம் யாழ்ப்பாணம் வின்சர் திரையரங்கில் ஓடியபோது இவரின் சகோதரர் முறையான ஒருவர் தியேட்டரின் திரையை கிழித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
பிற்காலத்தில் படவாய்ப்புக்கள் இல்லாமல்ப்போக இவர் ராமேஸ்வரத்தில் குடியேறி கோடிலிங்க சாஸ்த்திரி என்பவரை திருமணம் செய்து ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த இவர் கடைசிவரை இலங்கைக்குத் திரும்பவே இல்லையாம்.