நவீன நாடகத்துறையை கட்டிக் காத்துவரும் கலைத் தம்பதிகள் பாலேந்திரா -ஆனந்தராணி
ஈழத்தில் தொடங்கி ஜரோப்பிய மண்வரை நவீன நாடகக் கலையை இடைவிடாது கட்டிக்காத்துவரும் சிறந்த நாடகக் கலைஞர் திரு பாலேந்திரா அவர்கள்.
லண்டனில் மட்டுமல்லாது சுவிற்சிலாந்து கனடா அமெரிக்கா நோர்வே டென்மார்க் பிரான்ஸ் போன்ற நாடுகளிலெல்லாம் தமது அவைக்காற்றுக் கழகத்தின் மூலமாக நாடக விழாக்கழை நடாத்தி நாடகக் கலைக்கு மெருகூட்டி வருகின்றார்.
1978களில் ஆரம்பிக்கப்பட்ட அவைக்காற்றுக் கழகம் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ‘மழை” என்ற நாடகத்தின் மூலம் தனது கலைப்பணியை ஆரம்பித்தது இலங்கையிலேயே பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் ஜரோப்பாவிலும் பல நாடுகளில் மேடையேற்றப்பட்டு இன்னமும் மக்களால் வரவேற்கப்படும் ஒரு நாடகமாகவே விளங்குகின்றது.
சுமார் ஜம்பது நாடகங்கள் வரை நெறிப்படுத்தியிருக்கும் பாலேந்திரா அவர்களின் நாடகங்களில் அனேகமானவை மொழிபெயர்ப்பு நாடகங்களே. இவர் இயக்கிய புகழ் பெற்ற நாடகங்களானவை மழை, கண்ணாடி வார்ப்புகள், முகமில்லாத மனிதர்கள், ஜயா எலக்சன் கேட்கின்றார், பிச்சை வேண்டாம், யுகதர்மம், எரிகின்ற எங்கள் தேசம், ஒரு பாலை வீடு, மன்னிக்கவும், பேன்ற இன்னும் பல நாடகங்களைக் குறிப்பிடலாம்.
இலங்கை தொலைக்காட்சியான ரூபவாகினியில் இவரது கண்ணாடி வார்ப்புகள் நாடகம் ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றிருக்கின்றது.
பொறியியல் பட்டதாரியான திரு பாலேந்திரா அவர்கள் தனது நாடகத்தில் நடித்துவந்த ஆனந்தராணி என்பவரையே விரும்பி மணம் புரிந்து இன்றுவரை அவைக்காற்றுக் கழகத்தின் இரு தூண்களாக இருவரும் விழங்குகின்றார்கள்.
திருமதி ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் மேடை நாடகங்களில் மட்டுமல்ல பல வானொலி நாடகங்களிலும் ‘வாடைக்காற்று” ‘கோமாளிகள்” ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். அதுமாத்திரமல்ல இவர் ஒரு சிறந்த நடன ஆசிரியருமாவார்……இப்பொழுது தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருக்கின்றார்.
அனேகமாக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தக் கலைத் தம்பதிகள் ஆற்றிவரும் கலைப்பணி இன்னும் பல தசாப்தங்களுக்குப் பின்னரும் நாடகக் கலைஞர்களாலும் ரசிகர்களாலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.