நாடக வானொலி திரைப்பட நடிகர்
இயக்குநர் . எழுத்தாளர்
ஈழத்திருநாட்டில் நாடகத்துறையும் திரைப்படத்துறையும் வளர்ச்சியடையவேண்டும் என்று ஆர்வத்தோடு தம்மை அர்ப்பணித்தவர்களில் திரு.ரகுநாதன் அவர்களும் ஒருவர். எஸ்.டி.சாரி அவர்களின் மேற்பார்வையில் கலை அரிச்சுவடி கற்று ஈழத்தின் நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கம் ஜயா அவர்களின் பாசறையில் வளர்ந்த கலைஞர்களில் இவரும் ஒருவர்.
200க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களும் 500க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களும். இலங்கையில் 1963ல் தயாரிக்கப்பட்ட சரித்திரத் திரைப்படமான ‘கடமையின் எல்லை” என்னும் திரைப்படத்திலும் வி.பி.கணேசனின் ‘புதியகாற்று திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்திலும் நடித்திருந்த ரகுநாதன் அவர்கள் 1968ல்நிர்மலா” என்னும் திரைப்படத்தைத் தயாரித்ததோடு அதில் கதாநாகியின் அண்ணனாகவும் நடித்திருந்தார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரே சினிமாஸ்க்கோப் படமான ‘தெய்வம் தந்த வீடு” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததோடு சுண்டுக்குழி சோமசேகரனின் நெறியாழ்கையில் இலங்கை இந்தியக் கூட்டுத்தயாரிப்பாக தயாரிக்கப்பட்ட நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தில் இந்தியக் கலைஞர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். இது மாத்திரமல்ல பல சிங்களத் திரைப்படங்களிலும் திரைக்குப் பின்னால் நின்று பணியாற்றி திரைப்படங்களைப் பற்றி பல அனுபவங்களைப் பெற்றவராவார்.
ஜரோப்பாவில் தயாரிக்கப்பட்ட எஸ்.கே. ராஜனின் ‘இன்னும் ஒரு பெண்” இரா-குணபாலனின் ‘முகத்தார் வீடு” வில்லுப்பாட்டு ராஜனின் நினைவு முகம்” ராசநாஜகம் அவர்களின் ‘மௌனம்” மற்றும் ‘தயவுடன் வழிவிடுங்கள்” போன்ற சின்னத் திரைப்படங்களை நெறியாள்கை செய்து நடித்தும் இருந்ததோடு பாரிஸ்ட்டர் யோசேப் அவர்கள் தயாரித்து அஜீவன் அவர்கள் இயக்கிய ‘அழியாத கவிதை” என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இவை மாத்திரமல்ல பல குறும்படங்களையும் நெறியாள்கை செய்து நடித்தும் இருக்கின்றார். இவற்றில் கலைஞர் பரா அவர்களின் நெறியாழ்கையில் உருவான ‘பேரன் பேத்தி” இவருக்கு பெரும் புகழைத் தேடிக்கொடுத்த குறும்படமாகும்
இலங்கையில் தனது நிழல்” நாடக மன்றத்தின் மூலமாக 1968ம் ஆண்டு கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஏழு நாட்கள் இலவசமாக நிழல் நாக விழா நடத்தியவர் பின்னர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும் அதே விழாவை ஜந்து நாட்கள் நடாத்தி சாதனை படைத்திருந்தார்.
இலங்கையில் நிழல்” என்னும் கலைப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து சிறிது காலம் நடாத்திய ரகுநாதன் அவர்கள் பாரிசில் இருந்து வெளியான ‘பாரிஸ் முரசு பத்திரிகைக்கும் சில காலம் ஆசிரியராக இருந்திருக்கின்றார். திரைக்கதைகளை அமைப்பதில் வல்லவரான இவர் தனது கலைத்துறை அனுபவங்களை ‘தமிழன்” பத்திரிகையில் ‘ஒரு ஒப்பனை இல்லாத முகம்” என்னும் தலைப்பில் எழுதியிருந்ததோடு ‘எனக்காகப் பூக்கும்” நாவலையும் எழுதியிருக்கின்றார்.
கலைத்துறையை எப்பொழுதும் காதலிக்கும் திரு.ரகுநாதன் அவர்கள் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இத்துறையில் இருக்கின்றார். கலை வாழ்க்கையில் எதிர் நீச்சல்கள் போட்டே வாழ்ந்த இவர் கலைக்காக பல இழப்புக்களையும் சந்தித்திருக்கின்றார். அப்படியிருந்தும் இப்பொழுதும் உலகமெல்லாம் சிதறுண்டு வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் கலைஞர்களையெல்லாம் இணைத்து ஒரு தொலைக்காட்சித் திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார்.
1935ம் ஆண்டு மலேசியாவில் பிறந்த ரகுநாதன் அவர்கள் இப்பொழுது தனது 73வது வயதிலும் உலகம் சுற்றியபடி ஆற்றிவரும் இந்த கலை முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.