தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

கவிஞர். முருகையன்

poet1murukaiyan

சாவகச்சேரியைச் சேர்ந்த இராமுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளுக்கு 23.04.1935ல்  மகனாகப் பிறந்த கவிஞர் முருகையன் ஆரம்பக்கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் பின்னர் யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்றார். பட்டப்படிப்பை இலங்கைப் பல்கலைக்கழகங்களிலும், லண்டன் பல்கலைக்கழகத்திலும் படித்துப் பட்டதாரியானார்.

மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற இவர் கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், திறனாய்வு எனத் தன் சிந்தனைத் தெளிவை விரிவாக்கிக் கொண்ட இவர் இளவயதிலேயே பாநாடகம் எழுதிப்பாராட்டுப் பெற்றார். தவமணிதேவியைத் திருமணம் முடித்த பின்னர் நீர்வேலியில் வாழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் நோக்கு சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

அமரர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து கவிதை நயம் எனும் நூலை வெளியிட்டும் உள்ளார். இவர் அரசகரும மொழித்திணைக்கள மொழிபெயர்ப்பாளராகவும், ஆசிரியப்பயிற்சி கலாசாலை விரிவுரையாளராகவும், கல்வித்திணைக்கள கல்விப்பணிப்பாளராகவும் யாழ் பல்கலைக்கழக உதவிப் பதிவாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

‘இலக்கியம் என்பது வெறும் புளிச்சல் ஏப்பக்காரர்களின் விவகாரம் அல்ல. பொறுப்புணர்வுடனும் அவதானமாகவும் அக்கறையுடனும் ஆற்றப்பட வேண்டிய ஒருவகைத் தவம்’ இப்படித்தான் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிட்டது போல் வாழ்ந்தவர்.

ஈழத்து நவீன கவிதைகளின் ஆரம்பம் 40ல் மகாகவியுடன் ஆரம்பமானது என்பர். மறுமலர்ச்சி சங்கமே ஆரம்பித்து வைத்ததாகக் கூறுவர். இதன் தொடர்ச்சியான வளர்ச்சியை முருகையனின் கவிதைகளில் காணலாம்.

‘தனிமையில் நின்றேன், வயல்வெளி நடுவில்:
என்னைச் சூழ எழுந்து வீசிய
காற்றில் நெல் மணம் கமிழ்ந்து கொண்டிருந்தது.
நாலு திசையிலும் பார்வையை ஓட்டினேன்.
எட்டுத் திக்கும் என் கட்புலம் புகுந்தன.
நிலத்தையும் நோக்கினேன்: நீல வானையும்
என் கண் கூர்மை எட்ட முயன்றது.
அடிவான் எனது பார்வையில் விழுந்தது….’

அகிலத்தின் மையங்கள் எனும் கவிதையில் எழுதித் தொடர்கிறார். நாட்டின் களயதார்த்தம் அறிந்தும் தான் கற்ற விஞ்ஞான அறிவைப்பயன்படுத்தியும் ஆக்கங்கள் படைத்தார். இவரின் ஆக்கங்கங்கள் ஈழத்தின் பல சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது.

80ற்கு முன்பு எமது சனசமூக நிலைய அரங்கங்களில் அமரர் காரை சுந்தரம்பிள்ளை, அமரர் கவிஞர் ஐயாத்துரை, அமரர் சொக்கன், புதுவைரத்தினதுரை போன்றோருடன் கவிஞர் முருகையனும் கவியரங்கு நிகழ்வுகளில் பங்குபற்றிப் பெருமை சேர்த்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு ‘சாகியத்திய ரத்னா’ விருதும் சிறப்புக்கலாநிதிப் பட்டமும் அவருக்கு கிடைத்த சிறப்புக் கௌரவங்களாகும்.

இவரின் கவிதைகள் தாயகம், மல்லிகை, மூன்றாவது மனிதன் என பல சஞ்சிகைகள், தொகுப்புகளில் வந்தாலும் பதினொரு ஈழத்துக்கவிஞர்கள்(1984, 2003), மரணத்துள் வாழ்வோம் (1985), தொகுப்புகளில் வெளிவந்த கவிதைகள் இன்றும் பேசப்படுகிறது.

இவரால்…

1. ஒரு வரம்
2. நெடும் பகல்
3. அது அவர்கள்
4. மாடும் கயிறு அறுக்கும்
5. நாங்கள் மனிதர்
6. ஆதி பகவன்
7. ஒவ்வொரு புல்லும் பிள்ளையும்
8. வந்து சேர்ந்தன, தரிசனம்
9. கோபுரவாசல்
10. வெறியாட்டு
11. மேற்பூச்சு
12. சங்கடங்கள்
13. உண்மை
14. ஒரு சில விதிசெய்வோம்
15. இன்றைய உலகில் இலக்கியம்
16. கவிதை நயம் (கைலாசபதியுடன்)
17. இளந‌லம்
18. மொழிபெயர்ப்பு நுட்பம்

எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். பல நூல்களுக்கான பதிப்புரிமை கொண்டவராகவும் உள்ளார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர். 27.06.2009 ல் கொழும்பில் காலமானார். நல்ல நாடக ஆசிரியரை நல்ல நண்பனை இலக்கிய உலகம் இழந்து நிற்பது மாபெரும் சோகமே. முருகையனுக்கு முருகையனே ஈடாகும்.

-கவிஞர் ‍முல்லை அமுதன்

விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud