எழுத்தாளர் கோகிலா – மகேந்திரன்
ஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர்களில் திருமதி கோகிலா – மகேந்திரன் அவர்களும் ஒருவர். 17-11-1950 இல் தெல்லிப்பழையில் உள்ள விழிசிட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவரின் தந்தையார் திரு.செல்லையா – சிவசுப்பிரமணியம் அவர்கள் சமய எழுத்துக்காக சாகித்திய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாயார் பெயர் செல்லமுத்து.
இவரது கல்வியின் பெரும் பகுதியை வழங்கியது தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி ஆகும். அங்கிருந்து பேராதனைப் பல்கலைக் கழகம் சென்ற இவர் 1974 இல் ஆசிரியர் சேவையில் ஆரம்பித்து 1994 இல் அதிபராக பதவி உயர்வு பெற்று 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்று 2007ம் ஆண்டு அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அரச பணியில் இருந்த காலத்திலேயே எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்றதுடன் வட இலங்கை சங்கீத சபையின் நாடக கலா வித்தகர்” என்னும் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர் தயா-சோமசுந்தரம் அவர்களின் வழி காட்டலில் உளநல ஆலோசகர் பயிற்சி பெற்றுப் பின்னர் ஆசிரியர் உளவளத்துணையாளர்கள் பலரைப் பயிற்றுவித்தார். துற்பொழுது கொழும்பில் உளநல ஆலோசகராகப் பணியாற்றுகின்றார்.
எழுத்துத் துறையில் இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் எழுதிவரும் கோகிலா-மகேந்திரன் அவர்கள் சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, விமர்சனம், என பன்முகப் பரிணாமம் கொண்ட இவர் இரண்டு முறை இலங்கை சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.