நகைச்சுவை சக்கரவர்த்தி லூஸ் மாஸ்ற்றர் -ஐசாக் இன்பராஜ்
நவாலியூர் தந்த ஈழத்து நாடகத் தந்தை அமரர் கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களின் கலைப் பாசறையில் வளர்ந்த பிரபலமான கலைஞர்களில் அமரர் எஸ்.அருமைநாயகமும் ஒருவர்! அமரர் அருமைநாயகத்தைப்பற்றி இன்னுமொரு சிறப்பான செய்தி இவர் புரட்சி நடிகரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான அமரர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் உதவியால் சென்னை வாகினி ஸ்ரூடியோவில் எடிட்டிங், மற்றும் டைரக்ஸ்ன் ஆகிய துறைகளைப் பயின்று அங்கு வெளியான ‘அரசகட்டளை” நாம் மூவர்” ‘யாருக்காக அழுதான்” ஆகிய திரைப்படங்களுக்கு உதவி எடிட்டராகவும் இலங்கையில் தயாரான நிர்மலா” திரைப்படத்திற்கு எடிட்டராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர்! இவரைக் கலைக்குருவாகக் கொண்டவர்தான் நகைச்சுவைப் புயல் திரு. ஐசாக் இன்பராஜ் அவர்கள்.
இன்பராஜ் அவர்கள் அமரர் அருமைநாயகம் அவர்களின் ஸகாயர் நாடகாலயத்தின்” தயாரிப்புகளான ‘விழிப்பு” ‘யாருக்காக அழுதான்” ‘மாப்பிள்ளை தேவை” லேடி ரைப்பிசற்” போன்ற நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான ஐசாக் அவர்கள் கல்லூரியின் இடம் பெறும் நாடகங்களில் குறிப்பாக சக பழைய மாணவரான இரா-பாலச்சந்திரன் அவர்கள் கரேராமா கரே கிருஸ்ணா, மச்சானைப் பாத்தீங்களா, ஏரம்பு ஓரம்போ, தாசியும் தவசியும், போன்ற நாடகங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகனாக இனம் காட்டிக்கொண்டார்.
ஐசாக் இன்பராஜ் அவர்கள் நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல வில்லிசையிலும் சிறந்த விற்பனராகவே இருந்தார்! வில்லிசையில் விற்பனரான பிரம்மஸ்ரீ தங்கராசா ஐயருடன் இணைந்து நவாலியூர் ஈஸ்வரன் வில்லிசைக் குழுவில் நகைச்சுவைத் தொகுப்பாளராக இருந்த இவர் பின்னர் ‘வில்லிசை வேந்தன்” ‘கலைமாமணி” சின்னமணி வில்லிசைக் குழுவினருடன் இணைந்து வில்லிசையில் நகைச்சுவை மூலமாகப் பெரும் புகழடைந்தார். 1984ம் ஆண்டு சின்னமணி அவர்களின் குழுவினருடன் இணைந்து மலேசியா, சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கும் சென்று வில்லிசையில் பங்குபற்றியிருக்கின்றார்.
திரைப்பட நடிகர் சிலோன் விஜயேந்திரன் அவர்களின் ‘காதலா? கடமையா?” நாடகத்தில் நடித்தது மட்டுமல்லாது இலங்கையில் அவர் நடாத்திய மாபெரும் கலை விழாவில் கலகலப்பு பத்திரிகையின் ஆசிரியர் தீசனுடனும் குயில் பத்திரிகையின் ஆசிரியர் இணுவையூர் பாஸ்க்கரன் அவர்களுடனும் இணைந்து நடித்த ‘ஆச்சிக்குட்டிக்கு வாச்ச மாப்பிள்ளை” என்ற நாடகம் ஐசாக் அவர்களுக்கு பெரும் புகழைத் தேடிக்கொடுத்த நாடகமாகும்.
இன்பராஜ் என்னும் இவருடைய பெயருக்கு முன்னால் லூஸ் மாஸ்ற்றர்” என்னும் பெயர் ஒட்டிக்கொண்டதன் காரணம் லூஸ் மாஸ்ற்றர்” என்னும் பெயரில் இவர் தனி நடிப்பு நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வந்தார். அந்த நாடகத்தை ஒலிப்பதிவு நடா மூலமாக வெளியிட்டதன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் அந்த நாடகம் சென்றடைய இவரது பெயர் மேலும் பிரபலம் அடைந்து லூஸ் மாஸ்ற்றர் என்னும் பெயரும் இவர் பெயருடன் நிரந்தரமாகவே ஒட்டிக் கொண்டது.
1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராட்சி மாநாட்டுக் கலைவிழாவில் ‘யாருக்காக அழுதான்” நாடகத்தில் நடித்து பாராட்டுப் பத்திரம் பெற்ற ஐசாக் அவர்கள் 1985ல் புலம் பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்ற பின்னர் அங்கு மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளின் பல பாகங்களிலும் தனது லூஸ் மாஸ்ற்றர்” நாடகத்தை நடாத்தி வருகின்றார்.
புலம் பெயர் மண்ணில் மூத்த கலைஞர்களான முகத்தார்-யேசுறட்ணம், அப்புக்குட்டி-ராஜகோபால், ஆகியவர்களுடன் எல்லாம் இணைந்து நடித்திருக்கும் ஐசாக் அவர்கள் இன்னொரு மூத்த கலைஞரான திரு.ஏ.ரகுநாதன் அவர்கள் இயக்கத்தில் உருவான ‘முகத்தார் வீடு” என்னும் வீடியோத் திரைப்படத்திலும். ஈழவர் திரைப்படம் சார்பில் பாரிஸ்ற்றர் ஜோசேப் அவர்கள் தயாரித்த ‘கனவுகள்” என்னும் குறும்படத்திலும் நடித்திருக்கின்றார்.
ஜேர்மனியில் அதிகமான நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றியுள்ள ஐசாக் இன்பராஜ் அவர்கள் நடித்த நாடகங்களில் மாப்பிள்ளை தேவை, கிளாலிக்குள் மாப்பிள்ளை, வருவார் வருகின்றார் வந்தார், சிற்றிசன் எடுத்தாச்சு, போன்ற நாடகங்களைத் தானே எழுதி இயக்கி நடித்திருக்கின்றார். இவருக்கு ஜேர்மன் தமிழ் மக்களால் ‘விகட விற்பனர்” என்னும் பட்டமும், உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் ஜேர்மன் கிளையினரால் நகைச்சுவை வேழம்” என்னும் பட்டமும், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆசிரியர்களால் ‘காஸ்யமணி” என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப் பட்டிருக்கின்றார்.
இன்று ஐரோப்பா எங்கும் கலை நிகழ்ச்சிகள் நடாத்திவரும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய புகழ் பெற்ற ஒரு சில நடிகர்களில் ஐசாக் இன்பராஜாவும் ஒருவராகத் திகழ்கின்றார். இவரின் பகழ் மேலும் சிறப்படைய நாமும் வாழ்த்துவோம்.