இவர் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் முன்னோடிகளில் ஒருவர்!
இலங்கையின் முதல்த் தமிழ்த் திரைப்படமான ‘தோட்டக்காரி” படத்தின் கதை வசனங்களை எழுதி இயக்கி அந்தப் படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தவர் அமரர் திரு கிருஸ்ணகுமார் அவர்கள். இந்தத் திரைப்படம் வெளியான ஆண்டு 1963 ஆகும்.
கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இள வயதுக் காலத்தில் கலை ஆர்வம் காரணமாக நாடகங்களில் நடித்து வந்ததோடு சிங்களத் திரைபடங்களில் திரைக்குப் பின்னால் நின்று உழைத்ததுடன் திரைப்படங்களையும் கற்றறிந்து கொண்டார். கொழும்புவாழ் கலைஞர்களின் கலைக் குருகுலமான ‘மனோரஞ்சித கான சபா” நடாத்திய ராஜே இதிர மாஸ்ற்ரர் இவரின் கலை ஆர்வத்தை உணர்ந்து தங்கள் சபா அரங்கேற்றிய ‘கலிங்கத்துக் கைதி” ‘மலர்ந்து வாழ்வு” ஆகிய நாடகங்களில் கதா பாத்திரத்தில் நடிக்கவைத்திருந்தார். அதன் பின்னர் தங்கப்பழம், சு.இராசு அவர்கள் எழுதிய புரட்சிப்பெண் என்னும் நாடகத்தை இயக்கி இவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அதேநேரத்தில் சிங்களத் திரைப்படங்களின் முன்னோடிகளில் ஒருவரான சிறிசேன-விமலவீரவீன் நவஜீவன்” ஸ்ருடியோவில் உருவாகிய சிங்களத் திரைப்படங்களில் சகல துறைகளிலும் உதவியாளராக இருந்து திரைப்படம் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொண்டார்.
இலங்கையில் தமிழ்த் திரைப்படம் தயாரிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியவர் தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அந்தக் காலகட்டத்தில் மலையகத்தில் வாழ்ந்துகொண்டு இலங்கை எம்.ஜி.ஆர். மன்றத்தின் தலைவராகவும் ‘கலைக்குரல்” என்னும் பத்திரிகையை நடத்திவந்தவருமான அமரர் மணவைத்தம்பி அவர்கள். இவரது இந்த கலை ஆர்வத்திற்கு பக்கபலமாக இவரது நண்பர் வீ.தங்கவேலு மற்றும் இந்திய வங்கியில் பணியாற்றிய திரு.வி.எஸ்.முத்துவேலுவும் அவரது மனைவி ரஞ்சினி ஆகியோரும் இணைந்துகொள்ள ’தோட்டக்காரி” திரைப்படம் உருவாகி கொழும்பு கிங்ஸ்லி, வெள்ளவத்தை பிளாசா, யாழ்ப்பாணம் வெலிங்டன், ஆகிய முக்கிய திரையரங்குகளில் எல்லாம் வெளியானது.
அதன் பின்னர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1973ல் ‘மீனவப்பெண்” என்னும் திரைப்படத்தை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இவரே இயக்கி, நடித்தும், தயாரித்தும் வெளியிட்டார். அதே நேரத்தில் இலங்கையில் தயாரான அநேகமான தமிழத் திரைப்படங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் கிருஸ்ணகுமார் அவர்களின் பங்களிப்பு இருந்திருக்கின்றது.
இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை மறக்கமுடியாத பி.எஸ்.கிருஸ்ணகுமார் அவர்கள் 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் திகதி அமரத்துவம் அடைந்தார்.