வானொலி மாமா -திரு.எஸ்.சரவணமுத்து
தெற்காசியாவில் உள்ள வானொலிகளில் அதி சிறந்த வானொலியே இலங்கை வானொலிதான் என்னும் பெருமையை பெற்றிருந்த காலமது! அத்தகைய உயர்ந்த நிலைக்கு வானொலியை வளர்ச்சி கொள்ள வைத்தவர்கள் ஒலிபரப்பு முன்னோடிகள்! அவர்கள் இட்ட தளத்தில் நின்றுகொண்டுதான் இன்று பல வானொலிகள் சாதனை புரிகின்றன! அந்த இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையின் முன்னோடிகளில் வானொலி மாமா சரவணமுத்து அவர்களும் ஒருவர்.
வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் தங்களது கொள்கைகளைப் பரப்பவும், தங்களது செயல்களை நியாயப்படுத்தவும், தங்களது காரியங்களை இலகுவில் சாதித்துக் கொள்வதற்குமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இலங்கை வானொலி.
வெள்ளைக்காரர்கள் வானொலிக்கான சகல ஏற்பாடுகளையும் செய்தபின்னர் அதை நடத்துவதற்கு அவர்களுக்கு நம்பகரமான ஒரு ஆள் தேவைப்பட்டது. அப்படி தேடியபோது முதலில் கிடைத்தவர் சிறுவர் செந்தமிழ் நூல் தந்த ‘தங்கத்தாத்தா” நவாலியூர் சோமசுந்தரப் புதல்வரின் மகன் சோ.நடராசா அவர்கள். இவர் இலங்கையின் வானொலிப் பொறுப்பை ஏற்க இவருக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர்தான் அப்பொழுது அரசின் மிக உயர்ந்த பதவியில் இருந்த திரு.சரவணமுத்து அவர்கள்.
இந்த இருவரும் தங்களது கடமைகளை ஆங்கிலத்திலேயே செய்து வந்தாலும் வானொலியில் தமிழுக்கான தங்களது கடமைகளை மிக நேர்த்தியாகவே கடைப்பிடித்தார்கள். இவர்கள் வானொலி மூலமாக தமிழை வளர்த்தார்கள்! நாடு சார்ந்த நிகழ்ச்சிகளை தமிழில் ஒலிபரப்பி மக்களை நாட்டை நேசிக்க வைத்தார்கள். இது ஒரு வகையில் ஆங்கில மோகத்தை விரட்ட உதவியது என்றுகூடச் சொல்லாம்.
வானொலி மாமா திரு.சரவணமுத்து அவர்களும் சிறிது காலம் இந்த வானொலி நிலையத்திற்கு பொறுப்பாளராகவும் இருந்திருக்கின்றார். திருமறைப் பாடல்கள், தேவாராம், கர்நாடக இசைக் கச்சேரி, என்பவற்றை அடிக்கடி ஒலிபரப்பி தமிழின் தொன்மத்தை மக்களுக்கு அறியச் செய்தார். தமிழ் மொழியை சுத்தமாக அறிந்து வைத்திருந்த இவர்கள் இந்தப் பொறுப்பிற்கு வந்திருக்காவிட்டால் இலங்கை வானொலியின் போக்கே வேறாகக்கூட இருந்திருக்லாம்.
வானொலி மாமா ஒரு சிறந்த கலைஞரும்கூட! அன்று மாலை நேரங்களில் ஒலிபரப்பாகிய ‘விதானையார் வீடு” என்னும் நாடகத்தில் பேராசிரியர் சிவத்தம்பியுடன் இணைந்து இவரும் நடித்திருக்கின்றார். அது மாத்திரமல்ல கலைஞர் சானா அவர்களின் ‘லண்டன் கந்தையா’ என்னும் நாடகத்தில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு! இது போன்ற நல்ல நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியதில் வானொலி மாமாவிற்கு பெரும் பங்கு இருக்கின்றது.
இன்றும் தமது பெயரை இலங்கை வானொலியில் மங்காது வைத்திருக்கும் சிறுவர் மலரை ஊட்டி வளர்த்தவர் இந்த வானொலி மாமாதான்! இருபத்தி மூன்று ஆண்டுகளாக வானொலி மாமா என்னும் பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருந்த சாதனையாளர் இவர்.
இம் மாமாவில் வைத்திருந்த மரியாதை காரணமாக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ‘இப்பொழுதும்கூட எமது தலைமுறையினர்க்கு அவர் மாமாதான்’ என்று கூறுகின்றார் என்றால் சிவத்தம்பி அவர்கள் இவரின்மீது எத்தகைய மரியாதை வைத்திருந்தார் என்பதைப் பாருங்கள்.
வானொலி மாமா அவர்கள் ‘கிராம சஞ்சிகை’ என்ற நிகழ்ச்சியிலும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். அன் நிகழ்ச்சியில் பல காலமாக நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அது மாத்திரமல்ல தூர இடங்களில் உள்ள வணக்கஸ்த் தலங்களுக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்ற காரணத்தால் அன் நிகழ்ச்சிகளை வானொலியில் நேரடி அஞ்சல் செய்வார்கள். இத்தகைய அரிய பணியினை வானொலி மாமாவும் செய்திருக்கின்றார்.
தமிழுக்கும் தமிழ் வானொலிக்கும் இவர் செய்த அரிய பணிகளில் ஒன்று சோ.சிவபாதசுந்தரத்தை ஒலிபரப்புத் துறைக்குள் கொண்டுவந்ததுதான். இலங்கை வானொலியில் அவரின் வருகைக்கு மாமாவே சூத்திரதாரி.
வானொலி மாமா அவர்கள் இலங்கை வானொலியின் வரலாற்றில் ஒரு அடையாளம் மட்டுமல்ல அதன் மூல வேர்களில் இவரும் ஒருவர். இந்த ஒலிபரப்புத்துறைப் பேராசான் இன்றைய ஒலிபரப்பாளர்களுக்கு ஒரு அரிய புத்தகமாக, சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றார்.