ஈழத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ‘பதிய காற்று” வீசவைத்த
வீ.பி.கணேசன்
உண்மையில் வீ.பி.கணேசன் அவர்கள் சிறு வயது முதல் கலைத்துறையில் ஈர்க்கப்பட்டு திரைத்துறைக்கு வந்தவர் அல்ல! இவர் மலையக தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு தொழிற்சங்கவாதியே! ஆனாலும் மலையக தொழிலாளர்களின் அவல நிலையை உலகத்திற்குத் தெரியப்படுத்துவதற்கு சினிமா ஒரு சிறந்த சாதனம் என்பதனைத் தெரிந்து கொண்ட இவர் அதையும் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் பாணியில் சொன்னால்த்தான அது முழுமையாக மக்கள் மனங்களில் படியும். அதேநேரத்தில் திரைப்படத் துறையில் வெற்றியும் பெறலாம் என்ற நம்பிக்கையில் அதே பாணியில் தயாரிக்கப்பட்ட திரைப்படம்தான் ‘புதிய காற்று”
மலையக மக்களின் அவல வாழ்க்கையை மையமாக வைத்து கணேசன் அவர்களாலேயே எழுதப்பட்ட கதைக்கு தெளிவத்தை யோசப் அவர்கள் திரைக்கதை வசனம் எழுத பல சிங்களத் திரைப்படங்களை இயக்கியிருந்த திரு எஸ்.இராமநாதன் அவர்கள் இயக்கியிருந்தார். 1975ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் நொந்து கிடந்த தமிழ்த் திரைப்படத்துறைக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய படமாகும்! பொருளாதார ரீதியில் பெரிய வெற்றியை இப் படம் ஈட்டிக் கொடுக்காவிட்டாலும் கணேசனை நட்டவாளி ஆக்கிவிடவில்லை.
புதியகாற்று கொடுத்த உற்சாகத்தில் வீ.பி.கணேசன் எடுத்த இரண்டாவது திரைப்படம் ‘நான் உங்கள் தோழன்” இந்தப் படத்தின் மூலக்கதையும் கணேசனுடையதுதான். திரைக்கதை வசனத்தை எழுந்தியிருந்தவர் கொழும்பில் பிரபலமான கலைஞரான கலைச்செல்வன் அவர்கள். கணேசன் அவர்கள் இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர். பாணியில் கதாநாயகனாக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத் திரைப்படம் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, போன்ற முக்கிய நகரங்களில் ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படமாகும்.
இந்தப் படத்தில் ஒரு முக்கி அம்சமாக அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த தந்தை செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலக் காட்சியையும் கதையோடு இணைத்து படத்தில் சேர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் தயாரிப்பில் உருவான இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற காரணத்தினால் முன்னர் ‘அனுராகம்” என்னும் படத்தை தமிழிலும் சிங்களத்திலும் தயாரித்த யசபாலித நாணயக்காரா அவர்களுடன் இணைந்து கணேசன் அவர்கள் கூட்டுத்தயரிப்பில் தமிழிலும் சிங்களத்திலுமாக “நாடு போற்ற வாழ்க” என்னும் படத்தைத் தயாரித்தார். சிங்களப் படத்தின் பெயர் “அஞ்சனா”. தமிழ்ப் படத்தில் கணேசன் அவர்கள் கதாநாயகனாகவும் சிங்களப் படத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் கணவர் விஜய குமாரதுங்க அவர்களும் நடித்தருந்தார்கள்.
அன்றைய நாட்களில் சிங்கள தமிழ் திரைப்படங்களில் பிரபலமானவர்கள் எல்லாம் நடித்திருந்தும் “நாடு போற்ற வாழ்க” பொருளாதார ரீதியில் பெரும் தோல்விப் படமாகவே அமைந்தது. ஆனால் சிங்களப்படம் ஓரளவு கை, கொடுத்திருந்தது. “புதியகாற்று” திரைப்படம் மூலமாக கலைஞனாக அவதாரம் எடுத்த வீ.பி.கணேசன் அவர்கள் “நாடு போற்ற வாழ்க” திரைப்படத்தின் மூலமாக தனது கலைஞன் என்னும் அவதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார்.