நாட்டுக் கூத்துக் கலைஞர்
அமரர்.பூந்தான்-யோசேப்பு
பூந்தானி நாட்டுக் கூத்துக் கலைஞனி நாடக சிரோன்மணி நாட்டுக் கூத்துச் சக்கரவர்த்தி நாட்டுக்கூத்துப் பேரொளி கலைவேந்தன் கலைஞானபூபதி இசைப்புலவர் நாடக மன்னன் விருது நாட்டுக்கூத்துக் கலைக்காவலன் கலைக்குரு நாட்டுக்கூத்துப் பேராசிரியர் நாட்டுக்கூத்து மாமேதை நாட்டுக் கூத்துத் தந்தை நாட்டுக்கூத்து கலாநிதி
அமரர் பூந்தான் யோசேப்பு அவர்களுக்கு இத்தனை சிறப்புப் பட்டங்கள் இருந்தாலும் பூந்தான் என்னும் பட்டமே இவருடைய பெயருடன் நிலையாக இணைந்து கொண்டது.
நமது பாரம்பரிய கலையான நாட்டுக்கூத்துக் கலையை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை மற்றும் மன்னார்வரை கொண்டு சென்று அதனுடைய மகிமையை எழுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அக்கிராமங்களில் கலையார்வம் உள்ளவர்களுக்கு கூத்துக் கலையை கற்றுக்கொடுத்து அந்தக் கலை அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமை நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு அவர்களையே சாரும்..
நாட்டுக்கூத்து என்றால் பூந்தான் யோசேப்புதான் என்று மக்கள் நினைக்கும் வண்ணம் இவர் தனது கலைக் குழுவினருடன் இணைந்து நாடுமுழுவதும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் தனது நெறியாழ்கையிலான பல கூத்துக்களை அரங்கேற்றி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்திருக்கின்றார்.
ஒருமுறை கொழும்பில் வைத்தியக் கலாநிதி ஆனந்தராஜன் அவர்களின் தலைமையில் முத்தமிழ்க் கழகம் நடாத்திய முத்தமிழ் விழாவில் பூந்தான் அவர்கள் மேடையேற்றிய சங்கிலியின் நாட்டுக்கூத்தில் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசனின் மகன் திலீபனும் அமரர். சில்லையூர் செல்வராசன் அவர்களும் இணைந்து நடித்திருக்கின்றார்கள்.
1936ம் ஆண்டு இளவாலைக் கிராமத்து மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க அக்கிராமத்தில் உள்ள பழந்தலைமுறைக் கலைஞர்களையும் இணைத்து ‘தேவசகாயம்பிள்ளை” நாட்டுக்கூத்தை இயக்கி மேடையேற்றியதன் மூலமாக அண்ணாவியார் என்னும் ஸ்தானத்தை பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் ஆசனக்கோவில் முன்றலில் கலைஞர்களும் பொதுமக்களும் என ஏராளமானவர்கள் கூடியிருக்க வணக்கத்திற்குரிய ஆயர் வ.தியாகுப்பிள்ளை அவர்கள் பூந்தான் அவர்களின் கலைத் திறமையைப் பாராட்டி இவரின் தலையில் மலர்க் கிரீடம் வைத்துப் பெருமைப்படுத்தியிருந்தார்.
கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் தயாரித்த நிர்மலா என்னும் திரைப்படத்தில் பூந்தான் அவர்களின் நடிப்பிலான நாட்டுக்கூத்துக் காட்சியொன்றும் பதிவாகியிருக்கின்றது. அதுமாத்திரமல்ல இவரின் கலை வாழ்க்கையை அமரர் அகஸ்த்தியர் அவர்கள் ‘பூந்தான் யோசேப்பு கலையுலக வாழ்க்கை வாலாறு” என்னும் பெயரில் எழுதி நூலாக வெளியிட்டிருக்கின்றார்.
இன்று நாட்டுக்கூத்துக் கலையை நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்ல ரசிக்கும் ரசிகர்களும் அருகிக்கொண்டே போனாலும் பாரம்பரியம்மிக்க நமது நாட்டுக்கூத்துக் கலையை பார் முழுவதும் பேசவைத்தவர்களில் அமரர் பூந்தான் யோசேப்பு அவர்களும் ஒருவர் என்பது மறுக்கமுடியாததாகும்!