கண்டணத்தில் வல்லோன் கல்லடியான்
ஆசுகவி……..
கல்லடி வேலுப்பிள்ளை
ஈழம் தந்த பெருமை கொண்ட புலவர்களில் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவர். நகைச்சுவையும், கருத்துச்செறிவும், கொண்ட பாக்களையும், நூல்களையும், உரைகளையும், மக்களுக்குத் தந்த மாமேதை இவர்.
ஈழத்தில் உள்ள வசாவிளான் என்னும் கிராமத்தில் 1860ம் ஆண்டு திரு.கந்தப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவர் மிகச் சிறுவயதிலேயே அஞ்சா நெஞ்சத்துடன் நகைச்சுவையாகவும், சிலேடையாகவும், பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவற்றைக் கண்ட இவரின் பாடசாலை ஆசிரியர்கள் ‘வரும் காலத்தில் இவன் பெரும் புலவனாக வருவான்” என்றார்கள். பெரியவர்களின் ஆசியின்படி வேலுப்பிள்ளை அவர்கள் பெரும் புலவனாகவே திகழ்ந்து தமிழ் வித்தகர் என பாராட்டப்பட்டவர்.
சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து தனது அச்சகத்திலேயே அச்சிட்டு வெளியிட்டு வந்த இவர் ‘யாழ்ப்பாண வைபகவ கௌமுகி’ ‘கதிரமலைப் பேரின்பக் காதல்’ ‘மேலைத்தேய மதுபான வேடிக்கைக் கும்மி’ ‘உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் தோத்திரப் பாமாலை’ ‘அழகம்மா கும்மி’ ‘கருணாகரனின் ஊஞ்சல்ப் பாட்டு’ என பல நூல்களை எழுதியிருக்கின்றார்.
இவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மிக அரிதாகவே சிலரிடம் இருந்தாலும் கொழும்பு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகங்களிலும் சென்னை பல்கலைக் கழக நூல் நிலையங்களிலும் மக்களின் பாவனைக்காக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. திரு.வேலுப்பிள்ளை அவர்கள் எழுதுவது மட்டுமல்ல தமிழில் எங்காவது பிழையாக எழுதப்பட்டிருந்தால் அதனைத் திருத்தம் செய்யவும் தயங்கமாட்டார். இதனால் இவரைக் ‘கண்டணத்தில் வல்லோன் கல்லடியான்’ எனக்கூறி இவரது நண்பர்கள் மகிழ்ந்து கொள்வார்கள். இதற்கு ஒரு சிறிய உதாரணம்.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் ஒரு குளம். இதில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடும். இம் மீன்கள் அழிந்து போகாவண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை மாநகரசபைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ‘இக் குளத்தில் உள்ள மீன்களை ஒருவராலும் பிடிக்க முடியாது’ என பெரிய அட்டை ஒன்றில் எழுதி அதை குளத்தருகே நின்ற மரம் ஒன்றில் மாட்டியதுடன் தமது கடமையை செவ்வனே செய்தோம் என்ற மன நிறைவில் காவலர்கள் இறுமாந்திருந்தார்கள்.
ஒரு நாள் அவ்வழியே சென்ற வேலுப்பிள்ளை அவர்கள் இந்த அறிவித்தலை வாசித்து மிகவும் வேதனைப்பட்டார். நல்ல நம் தமிழை நம்மவர்களே கொலை செய்கின்றார்களே என வேதனைப்பட்ட வேலுபப்பிள்ளை அவர்கள் இவ் அறிவித்தலை எழுதியவர்களுக்குப் புத்தி புகட்ட எண்ணி கடைக்குச் சென்று மீன் பிடிக்கும் தூண்டில் ஒன்றை வாங்கி வந்து குளத்தில் உள்ள மீன்கள் சிலவற்றைப் பிடிக்கத் தொடங்கினார். இதைக் கண்ட காவலர்கள் வேகமாக அங்கு வந்து’ ஏய் நீ யார்? படிக்காத முட்டாளா? மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா என அதட்டலாகக் கேட்டார்கள். அதற்கு வேலுப்பிள்ளை அவர்கள்’ இந்த அறிவித்தலைப் படித்த படியால்த்தானே மீன்களைப் பிடிக்கின்றேன்! பிடிக்க முடியாது என இதில் எழுதியிருக்கின்றது. என்னால் முடியும்! அதுதான் பிடிக்கின்றேன்’ எனக் கூறிவிட்டு மீண்டும் மீன் பிடிக்கத் தொடங்கினார்.
இவரின் பேச்சாலும் செயலாலும் சினம் கொண்ட காவலர்கள் அவரைக் கைது செய்ய முயன்றார்கள். தான் கூறியதன் அர்த்தம் அந்தக் காவலர்களுக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்துகொண்ட வேலுப்பிள்ளை அவர்கள் ‘மீன் பிடிக்க முடியாது’ என எழுதியிருப்பது தவறென்பதைப் புரியவைத்து’ மீன் பிடிக்கக் கூடாது’ என எழுதி வைக்குமாறு விளக்கமாக எடுத்துக் கூறினார். தங்களது பிழையை உணர்ந்து கொண்ட காவலர்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் அவர் முன்னிலையிலேயே திருத்தமும் செய்தார்கள். தமிழுக்குரிய தொண்டை செவ்வனச் செய்த திருப்தியுடன் பிள்ளையவர்கள் வீடு போய்ச் சேர்ந்தார்.
வேலுப்பிள்ளை அவர்கள் கண்டணத்திற்கு வல்லோன் என்பதை விளக்கமாக அறிந்தோம். அவர் சிலேடையாகப் பேசுவதிலும் வல்லவர்! அதாவது ஒரு சொல்லில் இரண்டு கருத்துக்கள் வைத்துப் பேசுவார். இதற்கு ஒரு உதாரணம்.
செல்வம் கொழிக்கும் சிங்கப்பூரில் தர்மலிங்கம் என்று ஒரு செட்டியார் இருந்தார். இவர் சிறந்த தவில் வித்துவானும்கூட. கலைவாணி தன் கருணைக் கடாட்சத்தை இவர்மீது தாராளமாக வீசியதால் பல கச்சேரிகளை ஓய்வின்றிச் செய்து வந்தார். இதனால் கலைச் செல்வத்துடன் பொருட் செல்வமும் தாராளமாகவே இவரிடம் சேர்ந்தது.
கலைமகளும் தனமகளும் இவரிடம் காட்டிய கருணையை இவர் மக்களிடம் காட்டவில்லை. தான தருமம் செய்வதென்பது செட்டியாருக்குக் கசப்பாக இருந்தது. ஏழை எழியவர்களுக்கு உதவுவது வெறுப்பை ஊட்டியது! இதனால் கலைவாணன், தவில் மேதை, இசை மன்னன், என்றேல்லாம் புகழ்ந்து பேசிய மக்கள் கர்மி, உலோபி, கயவன், என்று இகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள்.
தன்னிடம் உதவியோ, தர்மமோ கேட்டு வருபவர்களிடம் ‘தண்ட வருவோரை கண்டிக்க தளரா மனம் அருள்வாய் பராபரமே’ என ஒரு அட்டையில் எழுதி அதைத் தனது பணியாளர்கள் மூலமாக அவர்களிடம் காட்டி அவமானப்படுத்தி அனுப்பிவிடுவார் செட்டியார்.
இந்த சமயத்தில் சிறப்பு மிக்க சிங்கப்பூரின் அழகை ரசிக்கவும் தனது உறவினரை பார்ப்பதற்காகவும் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கப்பூர் சென்றிருந்தார். இவரின் ‘சுதேச நாட்டியம்’ பத்திரிகையை அனேகமான சிங்கப்பூர்த் தமிழர்கள் சந்தா மூலம் வரவழைத்து படித்து வந்தார்கள். அவர்களில் தர்மலிங்கம் செட்டியாரும் ஒருவர். செட்டியார் ஒரு வருடகாலமாக சந்தாப் பணம் கட்டாததால் வந்த இடத்தில் செட்டியாரிடம் பேசி பணத்தையும் வாங்கலாம் என எண்ணி செட்டியார் வீட்டிற்குச் சென்றார்.
வீட்டிற்குச் சென்ற ஆசுகவியிடம் பணியாள் என்ன வேண்டுமென விநாவினான். உனது எஜமானைக் காண வந்தேன் என்றார் இவர். ‘எஜமான் இப்போது இங்கு இல்லை உமக்கு என்ன வேண்டும்” என விநாவினான் பணியாள். ‘எனது பத்திரிகையின் பணம் வாங்க வந்தேன்’ என்று இவர் சொன்னதும் பணியாள் செட்டியார் எழுதிக்கொடுத்திருந்த அட்டையைக் கொண்டு வந்து இவரிடம் கொடுத்து இதை வாசித்துவிட்டு உடனே போய்விடும்படி கூறினான். அதை வாசித்து மிகவும் வெட்கமும் வேதனையும் அடைந்த ஆசுகவி அவர்கள் செட்டியாரின் கர்வத்தை அவர் பாணியிலேயே அடக்க விரும்பினார். முள்ளை முள்ளால் எடுப்பதே அவரின் பாணி!.
‘தட்டியுண்ணும் செட்டியிடம்
தண்டுபவர் இங்கிருந்தால்
மட்டி அவர் என்றெல்லோ
மதிப்பேன் பராபரமே”
என பணியாள் கொடுத்த அறிவித்தலுக்குக் கீழே எழுதி உனது எஜமான் வந்ததும் மறவாது இதைக் கொடுத்துவிடு எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார் பிள்ளையவர்கள். செட்டியார் வீடு வந்ததும் வேலுப்பிள்ளை எழுதிக் கொடுத்ததை அவரிடம் காட்டினார் பணியாள். வாசித்த செட்டியாரின் உள்ளம் கொதித்தது! உடல் வியர்த்தது! மீசை துடித்தது! கண்கள் சிவந்தது! கோபம் தலைக்கேற தனது வழக்கறிஞரை வரவழைத்து வேலுப்பிள்ளை மீது மான நஸ்ட்ட வழக்குப் போட்டார்.
வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என வேதனையுடன் வேலுப்பிள்ளை அவர்களின் உறவினர்களும். எதிரி மிகவும் புத்தி சாதூர்யமுள்ளவராம்! வுழக்கு பார்ப்பதற்கு மிகவும் நன்றாயிருக்குமாமே! என்ற ஆவலில் மற்றோருமாக சிங்கப்பூர் நீதிமன்றம் நிரம்பியிருந்தது. செட்டியாரின் சட்டதரணி தனது கட்சிக்காரரை வேலுப்பிள்ளை அவர்கள் அவர் வீட்டிற்கே சென்று ‘தட்டித் தின்னி’ என மிகவும் இகழ்வாக எழுதிக் கொடுத்ததாகவும் இதற்கு மான நஸ்ட்டமாக 2000 வெள்ளி செட்டியாருக்குக் கொடுப்பதுடன் செட்டியாரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என வாதாடினார்.
‘தட்டித் தின்னி’ என எழுதிக் கொடுத்தீரா? ஏன்? நீதிபதி கேட்க, தனக்காக தானே வாதாடிய பிள்ளையவர்கள் ஒருமுறை எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு சிறு புன்னகையுடன் ‘கனம் நீதிபதி அவர்களே… நான் எழுதியது உண்மைதான்! ஆனால் திரு. தர்மலிங்கம் அவர்களை இகழ்ந்தோ கேலியாகவோ அப்படி எழுதவில்லை! நான் ‘தட்டி உண்ணும் செட்டி’ எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தால் உண்பதைக் குறிக்கும். செட்டியர் அவர்கள் தவில் தட்டித்தானே உழைக்கின்றார்! இவர் தனது அறிவித்தலில் ‘தண்ட வருவோரைத் தண்டிப்பேன்’ என எழுதியிருந்தார். எனது பத்திரிகையின் சந்தாப் பணம் இன்னமும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. அப்படியிருக்க இவரிடம் யாரும் தண்டப் போவார்களா? அப்படிப் போவோரையே மட்டிகள் என மதிப்பிட்டிருந்தேன் இதில் என்ன தவறிருக்கின்றது? தமிழை சரியாகப் புரிந்து கொள்ளாத செட்டியார் அவர்கள்தான் என்னை நீதிமன்றம் வரை இழுத்து அவமானப் படுத்திவிட்டார், என வாதிட்டார்.
கூடியிருந்த மக்களின் ஆரவாரமும் சிரிப்பொலியும் அடங்கிய பின்னர் வேலுப்பிள்ளை அவர்களை நிரபராதி எனக் கூறிய நீதிபதி. தர்மலிங்கம் வேலுப்பிள்ளைக்குச் செலுத்தவேண்டிய பத்திரிகைச் சந்தாப் பணத்தை உடனே கொடுக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் வித்தகத் தன்மையை விளங்க வைப்பதற்காக இரண்டு உதாரணங்களை இங்கு எடுத்துக் காட்டினோம் இப்படி வேலுப்பிள்ளை அவர்களின் ஏராளமான நகைச்சுவை மிகுந்த தமிழ் விளையாட்டுக்களும் விகடம் நிறைந்த கவிகளும் இன்றும் அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றது.