தமிழறிஞர் இளவாலை அமுதுப் புலவர்
தமிழறிஞர் வணபிதா தனிநாயகம் அடிகளார் பிறந்த பசுந்தீவு என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட தம்பிமுத்து சேதுப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரான திரு. அடைக்கலமுத்து (அமுது) அவர்கள் இளவாலையில் தனது வாழ்க்கைத் துணையாக திரேசம்மா அவர்களை கைப்பிடித்துக்கொண்ட பின்னர் அந்த மண்ணின் பெயரை முன்னதாகவும் அமுதுப்பிள்ளை என்னும்பெயரை அமுது என்றும் சுருக்க அதனுடன் இணைத்து இளவாலை அமுது என்னும் புனை பெயரில் பல கவிதை நூல்களை காவியங்களை எல்லாம் எழுதியிருக்கின்றார்.
இவருடைய தமிழ்ப் புலமைக்காக பல விருதுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் உலகின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதும், புனித பாப்பரசரிடம் இருந்து பாவேந்தர் என்னும் பட்டமும், அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்திருப்பதுடன் அண்மையில் கனடாவில் உள்ள தமிழர் தகவல் என்னும் நிறுவனம் இவ்வாண்டின் சிறப்பு விருதும் தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்திருக்கின்றது. இவையெல்லாம் தமிழுக்கு கிடைத்த பெருமைகளாகும்.
தனது பத்தொன்பதாவது வயதிலேயே தராதரம் பெற்ற ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கி சுமார் 45 ஆண்டுகள தாயகத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றியிருக்கின்றார்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை வித்துவசிரோன்மணி ந.சுப்பையா பிள்ளை. வித்துவான் வேந்தனார். புலவர்மணி இளமுருகனார். வித்துவான் கே.கே. நடராசா. பேராசிரியர்கள் செல்வநாயகம். வித்தியானந்தன். சதாசிவம். கணபதிப்பிள்ளை. ஆகிய தமிழ் அறிஞர்களிடமெல்லாம் கல்வி கற்ற பேரறிஞர் இவர்.
80 வயதை தாண்டிய நிலையிலும் வற்றாத தமிழ்ப் பற்றுடன் எழுதிக்கொண்டே இருக்கின்றார். மேடைகளில் சுவையாகப் பேசுவார். பேச்சின்போது குட்டிக் கதைகள் எல்லாம் நகைச்சுவையாகக் கூறுவார். இவை அவருடைய தனிச் சிறப்புக்களாகும்.
நெஞ்சே நினை, மாதா அஞ்சலி, இவ்வழி சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை திரேசா, மடுமாதா காவியம், புனித அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள் (இரண்டு பதிப்புகள்), இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள், ஆகிய நூல்களையெல்லாம் எழுதியிருக்கின்றார்.
இவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்.
சொல்லின் செல்வன் -ஞானப்பிரகாசர் தமிழ் மன்றம்
புலவர்மணி -என்றி அரசர் கல்லூரி பிரித்தானியா
முப்பணி வேந்தர் -பேராசிரியர் கலாநிதி இமானுவல் அடிகளார்
பாவேந்தன் -புனித பாப்பரசர்
தமிழ்க்கங்கை -ஜேர்மன் தமிழ்ப்பணி மன்றம்
கவியரசர் -பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்
மதுரகவி -யாழ் பல்கலைக் கழக வேந்தர்
கலாநிதி யாழ்ப்பாணம் -பல்கலைக் கழகம்
செவாலியர் -திருச்சபை தலமைப்பீடம் ரோம்
இவைதவிர இன்னும் பல மரியாதைக்குரிய விருதுகளும் பாராட்டுக்களும் கிரடைத்திருக்கின்றன இத்தனை சிறப்பகளும் கொண்ட பேரறிஞர் இளவாலை அமுது அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்தி அவரை வாழும்போதே கௌரவிப்பதில் நாங்களும் பெருமை அடைகின்றோம்.