பல்கலைவேந்தன்
அமரர். சில்லையூர்-செல்வராசன்
பல்கலை வேந்தன் தான் தோன்றிக் கவிராயர் போன்ற பட்டங்களுடன் கவிதை உரை நடைச் சித்திரங்கள் நாடகங்கள் என எழுத்துத் துறையிலும் மேடை வானொலி திரைப்படம் என கலைத் துறையிலும் பெரும் சாதனை படைத்த கலைஞன் அமரர். சில்லையூர் செல்வராசன் அவர்கள்.
இவரின் திறமைபற்றி இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக கடமையாற்றியிருந்த திரு.விமல்-சொக்கநாதன் அவர்கள் ஓரிடத்தில் சொல்லுகின்றார். வானொலியில் ஒலிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்பாவது ஒலிப்பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் சில்லையூரான் மட்டும் இதற்கு மாறுபட்டவர். இவர் அன்றைய நிகழ்ச்சிக்கு அன்றுதான் உரையாடல்களை எழுதுவார்! நிகழ்ச்சியின் பிரதிகளை முன்கூட்டியே எழுதி அதற்குரிய அதிகாரிகளிடம் அங்கீகாரம் பெறும் பழக்கம்கூட இவரைப் பொறுத்த மட்டில் கிடையாது! நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகுமா? இவர் வராவிட்டால் இடைவெளியை எப்படி நிரப்புவது? என்று நாங்கள் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருப்போம். ஏழு மணிக்கு ஒலிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சிக்கு சில்லையூரார் நான்கு மணிக்குத்தான் நிலையத்திற்கு வருவார். பின்பு வானொலி நிலைய தேனீர்ச் சாலையில் உட்கார்ந்து தேனீரை அருந்தி சிகரட்டை பற்றிக்கொண்டு மனிதர் எழுத ஆரம்பிப்பார். இவர் எழுத எழுத ஒவ்வொரு பக்கமாக கொண்டோடிப்போய் பிரதிகள் எடுத்து காத்திருக்கும் கலைஞர்களின் கைகளில் கொடுத்து ஒத்திகை ஆரம்பித்து ஒலிப்பதிவு நடக்கும். ஒலிப்பதிவு முடிந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒலிப்பதிவு நாடாவுடன் ஸ்ரூடியோவில் இருந்து வெளியே வரும்போது நேரம் 6-45 ஆகியிருக்கும் இது சில்லையூரானின் பாணி” என்கின்றார்.
இலங்கை வானொலியில் ‘அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே” என்ற பாடல் வரிகளுடன் மக்கள் வங்கியின் விளம்பரத்திற்காக ஒலிபரப்பாகிய ‘தணியாத தாகம்” நாடகத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். நாடகம் ஒலிபரப்பாகும் நேரத்தில் லட்சக்கணக்கான நேயர்களை வானொலிப் பெட்டிக்கு அருகில் உட்காரவைத்த அந்த நாடகத்தை எழுதியவர் சில்லையூர் செல்வராசன் அவர்களே.
இவரின் கலைப் பணி பற்றிக் பார்ப்போம். வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இலங்கையில் எடுத்த ஆங்கிலப் படம் ஒன்றில் இவர் நடித்திருக்கின்றார். ‘கோமாளிகள்” என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருக்கின்றார். அந்தப் படத்திலும் வேறு சில வானொலி நாடகங்களிலும் இவருடைய துணைவியார் கமலினி-செல்வராசன் அவர்கள் இவருடன் இணைந்து நடித்திருக்கின்றார். மேடை நாடகங்களிலும் கூத்து நாடகங்களிலும்கூட இவருடைய கலைப் பயணம் தொடர்ந்திருக்கின்றது.
கலைஞர் முகத்தார் யேசுறட்ணம் அவர்கள் ஒரு செவ்வியில் இவரைப்பற்றி கூறும்போது ‘வாடைக்காற்று” திரைப்படத்தில் நான் நடித்திருந்த கிழவர் பாத்திரம் சில்லையூரான் எனக்குப் போட்ட பிச்சை! கலைத்துறையில் சில்லையூரானுக்கு இருந்த செல்வாக்கில் அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் தெரிவானவர் சில்லையூர் செல்வராசன் அவர்கள்தான்! ஆனால் அவர் பெரும் தன்மையுடன் இந்தப் பாத்திரத்தில் யேசுறட்ணம் நடித்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் எனக்கூறி எனக்கு அந்தப் பாத்திரத்தை விட்டுக் கொடுத்தவர்” எனக் கூறியிருந்தார்.
சுதந்திரன் தினகரன் போன்ற பத்திரிகைகளில் எல்லாம் கடமையாற்றிய செல்வராசன் அவர்களின் கவிதைகள் பல மேடைகளையும் பல பத்திரிகைகளையும் அலங்கரித்து இருந்தபோதும் அவைகளை நூலாக்கும் முயற்சியில் இவர் இறங்கியதில்லை. சில வருடங்களுக்கு முன்னர் ரஜனி பதிப்பகம் இவர் எழுதிய கவிதைகளின் ஒரு பகுதியை ‘தலைவர்கள் வாழ்க மாதோ” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டு சில்லையூரானின் எழுத்துக்களைக் கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்