பிரியாலயம்-துரைஸ்-வளர்மதி-துரைஸ்
கலைத் தம்பதிகள்
மேடை வானொலி நடிகர் நாடக எழுத்தாளர் பாடலாசிரியர் சின்னத்திரைப்படத் தயாரிப்பாளர் நெறியாளர் அறிவிப்பாளர் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர் விளம்பர எழுத்துக் கலைஞர் பல் குரல் வித்தகா இப்படியாக கலைத் துறையின் பல பகுதிகளை தன்னகத்தே கொண்டிருப்பவர் திரு பிரியாலயம் துரைஸ் அவர்கள். இவரின் துணைவியார் திருமதி வளர்மதி-துரைஸ் அவர்களும் மேடை நாடகம் வானொலி நாடகம் சின்னத் திரைப்படங்கள் பலவற்றில் நடித்தும். நாடக இயக்குநராகவும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கலைத்துறையில் தன்னை அடையாளப் படுத்தியிருக்கின்றார்.
இள வயதிலேயே நாடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்ட துரைஸ் அவர்கள் தாயகத்தில் நடித்த சுந்தரம்பிள்ளை ” நிலவு குளிரவில்லை” ‘அரங்கேற்ரம்” போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலமானவையாகும். பாரிசில் நம்மவர்களில் முதல் நாடக நடிகராகவும் முதல் தமிழ் வானொலி அறிவிப்பாளருமான பிரியாலயம் துரைஸ் அவர்கள் இலங்கையில் தயாரான சுமதி எங்கே?” என்னும் திரைப்படத்திலும் சிறு பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
இவரின் எழுத்து இயக்கத்தில் மேடையேற்றப்பட்ட ‘பொன்னாடை” ‘புள்ளிகள் போட்ட கோலம்” ஆகிய நாடகங்கள் ஐரோப்பிய ரீதியாக நடந்த நாடகப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்றிருக்கின்றன.
பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தும் ஒளிப்பதிவு செய்து இயக்கியும் இருக்கும் இவர் நீதியின் சோதனை” ராஜாவின் ராகங்கள்” ஆகிய இரண்டு சின்னத் திரைப்படங்களை தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கின்றார். இந்தப் படங்களிற்கு கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு போன்றவற்றையும் இவரே கவனித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
பாரிசில் இருந்து ஒலிபரப்பான ரி.ஆர்.ரி.யின் வானொலியில் சில காலம் அறிவிப்பாளராகவும் ரி.ரி.என். தொலைக் காட்சியில் சில காலம் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருக்கும் துரைஸ் அவர்கள் பாரிசில் புகழ் பெற்று விளங்கிய மண்டலேஸ்வரன் இசைக்குழுவிலும் தொடர்ந்து ஈழநிலா, இளையநிலா, சப்தஸ்வரங்கள், ஸ்ரார், இசைக்குழு போன்ற பிரபலமான இசைக்குழுக்களில் எல்லாம் அறிவிப்பாளராகக் கடமையாற்றியிருக்கின்றார்.
பாடலாசிரியராகவும் இருக்கும் இவர் எழுதிய பாடல்களின் தொகுப்பாக ராஜாவின் ராகங்கள்” என்னும் புத்தகத்தை ரஜனி பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. எழுத்துத்துறையில் இவர் கொண்ட நாட்டத்தின் காரணமாக சிரித்திரு” என்னும் சஞ்சிகையை சில காலம் நடத்தியதோடு சிவனடியான்-சிறீபதி அவர்களின் நிர்வாகத்தில் வெளியான ‘தாகம்” பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பணியாற்றி இருக்கின்றார்.
இவற்றோடு விளம்பரப் பலகைகளை எழுதும் திறமைகளைக் கொண்டவரின் திறமைகளை அன்றே தெரிந்து கொண்டு நந்தினி கலைத் தென்றல்” 1973ம் ஆண்டு யாழ்-வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்திய கலை விழாவில் ‘கலையரசு” சொர்ணலிங்கம் ஜயா அவர்களின் கரங்களால் இவருக்கு பட்டம் வழங்கிக் கௌரவப் படுத்தப்பட்டிருந்ததும் இவர் பெற்ற சிறப்புக்களில் ஒன்றாகும்.
இவர் தனது கலைப் பணியை தன்னோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தனது குடும்பத்தையும் கலைத்துறையில் வளர்த்தெடுத்திருக்கின்றார். இவரது துணைவியார் வளர்மதி அவர்கள் துரைஸ் அவர்களாலேயே நடிகையாக உருவாக்கப்பட்டவர்! ஆம் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் பாரிசில் நடிப்பதற்கு பெண்கள் முன்வராத காலமது. அப்பொழுது துரைஸ் அவர்கள் தான் தயாரித்த நீதியின் சோதனை” என்ற சின்னத் திரைப்படத்தில் தனது மனைவியையே கதாநாயகியாக நடிக்க வைக்கின்றார் இதுவே வளர்மதி துரைஸ் அவர்களின் கலைத்துறைப் பிரவேசமாகும்.
தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய வளர்மதி அவர்கள் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களிலும் பல சின்னத் திரைப்படங்களிலும் நடித்து சிறந்த நடிகை என்ற பரிசில்கள் பலவற்றையும் பெற்றிருப்பதோடு ஓரிரு நாடகங்களை இயக்கியும் இருக்கின்றார். அத்தோடு ரி.ஆர்.ரி. மற்றும் ஏ.பி.சி. தமிழ் வானொலிகளில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்து தனது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இந்தத் தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள் அவர்கள் மூவரும்கூட கலைத்துறையில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மூத்தவர் தீபன் அவர்கள் பல குறும்படங்களில் நடித்திருப்பதோடு இசைத்துறையிலும் மிளிர்ந்துகொண்டு வருகின்றார். அதேபோல மற்ற இரு பிள்ளைகளும் இசைத் துறையிலும் நடனத் துறையிலும் வளர்ந்துகொண்டு வருகின்றார்கள்.
இந்தக் கலைக் குடும்பம் மென்மேலும் புகழடைய வாழ்த்துவோம்.