கலைஞர். கவிஞர் கூத்தாடி வி.செ. குஞ்சிதபாதம்
(அடங்காப்பிடாரி-குஞ்சிதபாதம்)
ஈழமணித் திருனநாட்டின் தமிழர் வாழுமிடங்களெல்லாம் 1338 மேடைகள் அரங்கேறி மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும் பல பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்ற ‘அடங்காப்பிடாரி” நாடகத்தை எழுதி இயக்கியவர் திருவாளர் கூத்தாடி குஞ்சிதபாதம் அவர்கள்.
விகட விற்பனர் வி. செல்லையா அவர்களின் இளைய புதல்வரான குஞ்சிதபாதம் அவர்கள் தனது பன்னிரண்டாவது வயதிலேயே தனது மூத்த சகோதரரான பரமானந்தம் அவர்களால் நிறுவப்பட்ட யாழ் சுண்டுக்குழி நாடகமன்றத்தில் இணைந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்
தனது இருபதாவது வயதில் மன்றத்தின் செயலாளர் பொறுப்பினை ஏற்ற இவர் 1962ம் ஆண்டில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய ‘புலித்தேவன்” நாடகத்தை முதல் முதலாக யாழ்ப்பாணம் நல்லூர் நகரில் அரங்கேற்றி அதன் விபரங்களை கல்கண்டு பத்திரிகையிலும் வெளிவர வைத்தமை இவரின் திறமைக்கு சான்றாகும்.
இவரின் மரபுக் கவிதைகள் ஈழத்துப் பத்திரிகைகளில் அடிக்கடி வருவதுண்டு. இவரிடம் உள்ள சிறப்புத் திறமைகளில் ஒன்று எந்த ஒரு நடிகராவது சுகயீனம்! அல்லது வேறு காரணங்களால் அன்று நடிக்கமுடியாமல்ப் போனால் அது எப்படியான பாத்திரமாக இருந்தாலும் தானே ஏற்று எழிதாக நடித்துவிடுவார்.
நாடகம் பொழுது போக்கு கலையாக இல்லாமல் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையில் சமூகத்தில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்ட வேண்டும் என்னும் கொள்கையுடைய இவர் இப்பொழுதும் கலைத் தாகத்துடனேயே வாழ்ந்து வரும் இவர் காலச் சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.