இலக்கியச் செல்வர் இளங்கீரன்
இளங்கீரன். இவர் ஒரு எழுதுகோல் விஞ்ஞானி! வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து வெடித்துக் கிளம்பி ஏழ்மையில் உழன்று சாதாரண மக்களுடன் வாழ்ந்து அவர்களிடம் கற்று மாக்சியம் பயின்று சமூகப் பிரஞ்சை பெற்றுப் பயனுள்ள நூல்களையெல்லாம் படித்து, தான் படித்தவற்றை ஏனையோருக்குப் பகிர்ந்தளித்து பாமரர் முதல் பல்கலைக் கழக பேராசிரியர்கள் வரை நெருங்கிப் பழகி நல்ல இலக்கியங்கள் பலவற்றைப் படைத்து ஈழத்து இலக்கியத்தில் பொற்காலத்தை தோற்றுவித்த இலக்கியவாதி இளங்கீரன் அவர்கள்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்க கால்கோளிட்டு அதன் நான்கு தசாப்தகால வரலாறுகளை ஒரு வரலாற்று ஆவணமாகத் தொகுத்தளித்து இறுதி மூச்சுவரை சங்கத்துடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்ட சிறிய உருவம் கொண்ட ஒரு மாமனிதரே சுபைர் இளங்கீரன் அவர்கள்.
மக்களுக்காகவே கலையும் இலக்கியமும் என்ற கோட்பாட்டையொட்டி சொல்லிலும் செயலிலும் பிசகாது வாழ்ந்து வந்தவர் இவர்.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தன்னையும் இணைத்துகொண்டு செயற்பட்ட இவர் தன்னை ஒரு பார்வையாளனாக விலகி நின்று மக்கள் இலக்கியம் படைப்பதாக பம்மாத்துக்காட்டவில்லை. மக்கள் இயங்கங்களில் பங்கேற்றுச் செயல்ப்பட்டவர்.
சாதி சமூகக் கொடுமைகள், சீதணம், இனவாதம், அகியவற்றுக்கெதிராக இவரது பேனா போராடியது! இலங்கையின் முற்போக்கு எழுத்து வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு அத்தியாயம் சுபைர்-இளங்கீரன் அவர்கள்.