தமிழ்த்தூது
தனிநாயகம் அடிகளார்.
தனிநாயகம் அடிகளார் அவர்கள் மேடைகளில் தோன்றி நடித்த ஒரு கலைஞர் அல்ல! ஆனாலும் கலைஞர்கள் தமிழுக்குச் செய்த சேவையைவிட அதிகமாக…இல்லை இல்லை மிக..மிக.. அதிகமாகச் செய்தவர்.
இவருடைய எழுத்துக்களோ! பேச்சுக்களோ! ஏராளமாக இருந்தாலும் ‘தமிழ்த்தூது” என்னும் புத்தகத்தின் பெயரே இவரின் பெயரோடு இணைந்து கொண்டது! ஏராளமான ஆராட்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். உள்நாடு வெளிநாடுகளில் உள்ள பல்மொழிப் பத்திரிகைகள் பல இவருடைய பேச்சுக்களை, எழுத்துக்களை, பக்கம் பக்கமாக பிரசுரித்திரிக்கின்றன.
பிரான்சிஸ்-சேவியர் என்ற தனிநாயகம் அடிகளார் அவர்கள் செய்த தமிழ்ப்பணி மிகப் பெரியதாக இருந்தாலும் இவர் தமிழ் இலக்கியங்களை முறையாக கற்றிருக்கவில்லை! இதற்குக் காரணம். இவர் கல்வி கற்றது யாழ் சம்பத்தரசியர் கல்லூரி. தமிழில் பேசினாலேயே தண்டனை கொடுக்கும் கல்லூரி சம்பத்தரசியர் கல்லூரி! ஆதலால் இவருடைய இளமைக் காலங்களில் தமிழ்ப்பற்றின் வேர்களுக்குத் தண்ணீர் வார்க்கப்படவில்லை! ஆனாலும் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வெள்ளத்தில் மூழ்கி எழுந்தவர் இவர்.
அன்று யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த கல்லூரிகளில் ஒன்றாக யாழ்- பரமேஸ்வராக் கல்லூரியும் விளங்கியது! இன்று அந்தக் கல்லூரிதான் யாழ் -பல்கலைக் கழகமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது. 1951ம் ஆண்டு யாழ்- பரமேஸ்வராக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் விழா ஒன்றில் தனிநாயகம் அவர்களின் கன்னிப் பேச்சு இடம்பெற்றது. அதை கன்னிப் பேச்சு என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தனிநாயகம் என்னும் தமிழ்த்தேன் வெள்ளோட்டம் இடம்பெற்றது என்று கூறலாம்!.
வெங்கல நாதம் போன்ற குரல், கூச்சம் அறியாத பேச்சு, முக வசீகரம், சொல்லழகு, கருத்துக்குவியல், பல மொழி அறிவு, பலவேறு நாடுகளுக்கும் சென்றுவந்த அனுபவம், இவையெல்லாம் அவரது கன்னிப்பேச்சில் எதிரொலித்தது. எவராலும் மறக்கமுடியாத பேச்சு அது! அந்தப் பேச்சில் அவர்….
‘ஆங்கிலத்தை வணிகத்தின் மொழி என்றும்…
இலத்தீனைச் சட்டத்தின் மொழி என்றும்….
கிரேக்கத்தை இசையின் மொழி என்றும்…
ஜேர்மனை தத்துவத்தின் மொழி என்றும்…
பிரெஞ்சை தூதின் மொழி என்றும் கூறுவார்கள்!
இனிமேல் இந்த வரிகளோடு தமிழையும் சேர்த்துக் கொள்ளுங்கள்…. இரக்கத்தின் மொழி தமிழ் மொழி என்று கூறுங்கள்! பக்தியின் மொழி தமிழ் மொழி என்று கூறுங்கள்!
இரக்கமும் பக்தியும் மனம் உருகுவதால் தோன்றும் பண்புகளைப் பாருங்கள்! தமிழ் இரங்குவது போல் வேறு மொழிகள் இரங்குவது அரிது!” என்றார்
இதனைக் கேட்ட காதுகளில் தேன் வெள்ளம் பாய்ந்தது! ஆயிரக்கணக்கான கண்கள் இமை மூட மறந்து உங்களையே உற்றுப் பார்த்ன! அங்கு கைதட்டிய ஓசையில் கட்டிடமே அதிர்ந்தது!
அன்று தலமை தாங்கவேண்டிய சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் மேடைக்குவர தாமதமாயிற்று. ஆனாலும் பின்னர் அவர் மேடையில் தோன்றி ‘தனிநாயகத்துக்கு ஒரு சபாநாயகம் தேவையில்லை” என்று கூறியபோது சபையே ஆரவாரத்தில் குலுங்கியது.
இவர் பிறந்த ஊர் நெடுந்தீவு. நெடுந்திவில் நடந்த ஒரு பெரு விழாவில் இவருக்கு ஒரு வாழ்த்து மடல் அளித்தார்கள். அதிலே நெடுந்திவின் புற உருவப்படத்தை வரைந்து கரையோரமாக பசுக் கூட்டங்கள், குதிரைக் கூட்டங்கள், வெடியரசன் கோட்டை, ஆலயங்கள், காடுகள் எல்லாம் அழகுமயமாக வரையப்பட்டிருந்தன! மாணிக்கத்தம்பி என்பவர் அந்த சித்திரமேடையை உருவாக்கியிருந்தார். வாழ்த்தைப் பெற்றுக்கொண்ட தனிநாயகம் அவர்கள் சொன்னார் ‘இது எனக்குத் தரப்பட்ட வாழ்த்து அல்ல நான் பிறந்த மண்ணான நெடுந்தீவிற்குக் கிடைத்த பெருமை” எனக்கூறி பிறந்த மண்ணின் மீது தமக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்தியிருந்தார்.
1958ல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் உயர் பட்டப் படிப்பின் கற்கை நெறிக்கு விரிவுரையாளராக இருந்தபோது பல்கலைக் கழக மண்டபத்தில் தமிழ் நூல்களில் புத்தகக் கண்காட்சி ஒன்றை நடாத்தி வைத்திருந்தார். அந்தக் கண்காட்சிக்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் அறிஞர்களும் வாசகர்களும் வந்திருந்தார்கள். மானிப்பாயில் வாழ்ந்த டாக்டர் கிறீன் அவர்கள் எழுதிய வைத்திய நூலும் அந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்தக் கண்காட்சியைப்பற்றி இளவாலை அமுது அவர்கள் வீரகேசரியில் எழுதும்போது அது ஒரு புத்தகப் பூஞ்சோலை எனக் குறிப்பிட்டிருந்தார்.
ரோமாபுரியில் 43 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களோடு கல்வி கற்றுவந்த காலத்தில் அங்கு வீராமாமுனிவர் கழகத்தைத் தொடங்கி யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ்ப் பண்பாட்டிற்கு அங்கே அத்திவாரம் இட்டு வைத்தார். உலக நாடுகளில் இவரின் கால் பதியாத நாடுகளே இல்லையென்று கூறலாம்! உலகத்தின் 47 நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார்.
அடிகளார் மலேசியா பல்கலைக் கழகத்தில் கலைத்துறையின் பீடாதிபதியாக இருந்த வேளையில் டில்லி மாநகரில் தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடிய சபையில் உலகம் தழுவிய தமிழ் அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்னும் கருத்தை முன் வைத்தார் அடிகளார். அதன் பயனாக 1964ல் உருவானதே உலகத் தமிழ் ஆராட்சி மன்றம்.
தமிழ் ஆராட்சி என்பது தமிழ் இலக்கண, இலக்கிய, நூல்களை ஆராய்வதுதான் என்ற கருத்து நம்மிடையே நெடுங்காலமாக நிலவியது. அடிகளார் இந்தக் கருத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டார்!
தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்களின் சமயம், தத்துவங்கள், தொல் பொருள் இயல், பிறநாட்டுத் தொடர்பு, தமிழர் பண்பாடு, தமிழர் கலைகள், மொழியியல் என்று பல்வேறு திசைகளை தமிழாராட்சியில் இடம்பெறச் செய்தார்.
அடிகளாரின் கடுமையான உழைப்பினால் முதலாவது தமிழ் ஆராட்சி மாநாடு மலேசியாவில்த்தான் பூத்துக் குலுங்கியது. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட மலேசியப் பிரதமர் அம் மாநாட்டினையும், அடிகளாரின் தமிழ்ப் பற்றினையும் வாயார வாழ்த்திச் சிறப்பித்தார்.
அரசியல் ஞானியும் பேராசிரியருமான ஏ.ஜே.வில்சன் அவர்கள் அடிகளாரை நாட்டுப்பற்று நாயகம், என்றும். அறிவுக் களஞ்சியம், என்றும். குருமணி, என்றும் குறிப்பிட்டுப் பாராட்டினார். பேரறிஞர் குலேந்திரன் அவர்களோ ‘கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அளவிடற்கரிய பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடிகளாரை விஞ்சியவர்கள் எவருமே இல்லை” என்றார்.
தமிழுக்கு இவ்வளவு சிறப்பும் பெருமையும் தேடித்தந்த தனிநாயகம் அடிகளாருக்கு அறிஞர்களும் கல்விமான்களும் இணைந்து நெடுந்தீவில் அவரது உருவகச் சிலையை நிறுவியதோடு ‘தமிழத்தூது” என்ற அவரது நூலை மீளப் புதுப்பித்து அடிகளாரின் சேவையை பலரும் அறியக்கூடியவாறு ஆவன செய்திருக்கின்றார்கள்.