அமரர் கீழ்க்கரவைப் பொன்னையன். கவிஞன் எழுத்தாளன் நடிகன் நெறியாளன் பட்டிமன்றப் பேச்சாளன்
தனக்குத் தெரியாத ஒரு துறை இல்லையென மற்றவரை வியக்கவைத்த வித்தகன் கீழ்க்கரவைப் பொன்னையன் அவர்கள். தனது கல்லூரிக் காலத்திலேயே பட்டிமன்ற மேடைகளில் தனது பேச்சுத் திறமையால் எதிரணிகளைத் திணறடித்த பொன்னையன் அவர்கள் பின்னாளில் பட்டி மன்றங்களுக்கு நடுவராகவும் பணியாற்றியிருக்கின்றார். அதேபோல கவியரங்க மேடைகளிலும் தனது கவித்திறனைக் காட்டி வந்திருக்கின்றார்.
புலம் பெயர்ந்த பின்னரே எழுத்துத்துறையிலும் கலைத்துறையிலும் இவரின் திறமைகளைக் காட்டுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. வியூகன் என்னும் பெயரில் சிறுகதைகள் கவிதைகள் எழுதியதோடு பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் தனது சொந்தப் பெயரில் தொடராக எழுதிய ‘விதை மட்டுமல்ல விளை நிலமும்கூட” என்னும் நாவலை பின் நாட்களில் சத்தியகீதை” என்னும் பெயரில் சின்னத் திரைப்படமாகவும் தனது பொன் கலைக்கூடத்தின் சார்பாக தயாரித்து வெளியிட்டிருக்கின்றார்.
சத்தியகீதை படத்தில் தயாரிப்பு ஒளிப்பதிவு படத்தொகுப்பு நெறியாழ்கை என்பதோடு தந்தையும் தனையனுமாக இரட்டை வேடங்களிலும் பொன்னையன் அவர்கள் நடித்திருந்தார் தொடர்ந்து ‘புயல்” ‘தீமழை” ஆகிய படங்களும் இதேபோல இவருடைய பல பங்களிப்புக்களுடன் உருவாகி வெளிவந்திருக்கின்றது.
ரி.ஆர்.ரி தமிழ ஒலி வானொலியில் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியிருந்த பொன்னையன் அவர்கள் சாளரம்” என்னும் இலக்கிய நேரத்தில் கவிதைகளைத் தொகுத்து விமர்சனம் செய்து வழிங்கியிருந்தார்.
பொன்னையன் அவர்கள் தனது கலைப் பயணத்தின் தொடர்ச்சியாக நான்காவதாகவும் ஒரு சின்னத் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கையில் இடையிலேயே காலன் இவரை அழைத்துக்கொண்டான்.