எழுத்தாளர் -மல்லிகை சி.குமார்
அனேகமான எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் அது அவர்களுடைய ஆரம்பகால எழுத்துக்களை அனேகமாக எல்லாப் பத்திரிகைகளும் நிராகரித்திருக்கும்! தாங்கள் எழுதிய கதையோ, கவிதையோ, இந்தவாரம் வரும்! அடுத்தவாரம் வரும்! என ஏமாந்த எழுத்தாளர்கள் ஏராளம்! அதற்கு சி.குமார் அவர்களும் விதிவிலக்கல்ல! இவருடைய எழுத்தின் ஜீவனைப் புரிந்துகொண்டவர் மல்லிகை டோமினிக் ஜீவா அவர்கள்.
குமார் அவர்களின் முதலாவது சிறுகதை மல்லிகை சஞ்சிகையிலேயே பிரசுரமானது. அன்று முதல் தனது பெயரை மல்லிகை சி.குமார் என்றே பதிவு செய்து வருகின்றார். மலை முகடுகளும், தேயிலைக் காடுகளும்தான் குமார் அவர்களின் உலகம் எனச் சொல்லாம்! ஆம்! மலையக மக்களைப்பற்றிய யதார்த்த பூர்வமான உண்மைகளை தனது எழுத்துக்கள் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் குமார் அவர்கள்.
மலையகத்து எழுத்தாளர்கள் பலர் இன்று நகர்ப்புற வாசிகளாக மாறிவிட்டபோதும் குமார் அவர்கள் இன்றும் தனது வாழ்க்கையை தோட்டத்திற்குள்ளேயே அமைத்துக்கொண்டு அந்த மக்களையே தனது கதைகளின் பின்புலமாக வைத்துகொண்டே தனது படைப்புக்களைப் படைத்து வருகின்றார்.
ஏராளமாக எழுதிக் குவித்திருக்கும் மல்லிகை சி.குமார் அவர்கள் பொருளாதார நெருக்கடிகளால் பல சிரமங்களுக்கு மத்தியில் ‘நாடும் வீடும்’ என்னும் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார் எழுத்தாளர் திரு. சாரல் நாடான் அவர்கள் இவரது சிறுகதைகளைத் தொகுத்து அண்மையில் ‘மனுசியம்’ என்னும் பெயரில் வெளியிட்டிருக்கின்றார்.
சிறுகதை, கவிதை, நாவல், ஓவியம், என தனது ஆழுமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்திவரும் மல்லிகை சி.குமார் அவர்களின் வாழ்வும் எழுத்தும் ஒன்றாக இருப்பதே இவரது வெற்றியின் இரகசியமாகும்.